பினாங்கில் பிஎன் 2008ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரும் தேர்தலில் நல்ல அடைவு நிலையைப் பெறும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நம்பிக்கை கொண்டுள்ளார்.
“பினாங்கில் வெற்றி பெறுவது முடியாத காரியமல்ல ஆனால் எளிதானதும் அல்ல,” என அவர் பினாங்கில் இன்று நிருபர்களிடம் கூறினார்.
“நாங்கள் அது குறித்து உண்மையைப் பேச விரும்புகிறோம். ஏனெனில் நாங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வதாக நினைக்கும் தரப்புக்களும் உள்ளன,” என்றார் அவர்.
“பினாங்கும் வீடமைப்பு, நிலம் போன்ற பிரச்னைகளைக் கொண்டுள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம்.”
பினாங்கு என்ற சொல் மீது முதலமைச்சர் லிம் குவான் எங் ஏகபோக ஆதிக்கத்தைக் கொண்டிருக்க விரும்புவதாக முஹைடின் சாடினார்.
மலாக்காவிலிருந்து வந்த லிம் மாநிலத்தில் ஏகபோக ஆதிக்கத்தை நாடுகிறார். அதே வேளையில் மக்கள் அதனைச் செய்யக் கூடாது என லிம் எண்ணுவதாக முஹைடின் சொன்னார்.
கடந்த காலத்தில் பிஎன் பல இடங்களை இழந்ததுடன் ஒப்பிடுகையில் வாக்காளர்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு தொகுதியிலும் பிஎன் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.”
மக்களிடையே ‘புதிய விழிப்புணர்வு’ ஏற்பட்டு அவர்கள் பிஎன் -னுக்கு ஆதரவாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும் துணைப் பிரதமர் சொன்னார்.
“கடந்த காலத்தில் பக்காத்தான் ராக்யாட் வலுவாக இருந்ததால் நாங்கள் தோல்வி அடையவில்லை. மாறாக தொகுதிகளில் நிலவிய உட்பூசல்களே அதற்குக் காரணம். அவை இப்போது தீர்க்கப்பட்டு விட்டன.”
பினாங்கிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்ட முஹைடின், மாநிலத்தில் உள்ள 345 நடவடிக்கை மய்யத் தலைவர்களையும் சந்தித்து தமது எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்.