சபா முதலமைச்சரின் உறவினர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்

amalilioபிலிப்பீன்ஸ் அதிகாரிகளினால் தேடப்படும் குற்றவாளியான மானுவல் கேரிங்கால் அமாலிலியோவுக்கு போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோத்தா கினாபாலுவில் உள்ள முதலாவது எலிசபத் அரசியார் மருத்துவமனையில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

அமாலிலியோ மானுவல் கேரிங்கால் என்ற பெயரில் பிலிப்பீனோ பாஸ்போர்ட் ஒன்றை எந்த வகையான சட்டப்பூர்வமான அங்கீகாரமும் இல்லாமல் வைத்திருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை முகமட் கமால் பின் சாயிட் என்றும் அறியப்படும் அந்த 47 வயது வணிகர் ஒப்புக் கொண்டார் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கல்லீரல் பிரச்னைக்காக அவர் அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டார். அதனால் மாஜிஸ்திரேட் நுருஹுடா முகமட் யூசோப் முன்னிலையில் அந்த விசாரணை மருத்துவமனை வார்டில் நடத்தப்பட்டது. அவர் சார்பில் கைருல் ஒஸ்மான் வாதாடினார்.

ஜனவரி 25ம் தேதி மாலை மணி 5.30க்கு கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமாலிலியோ கைது செய்யப்பட்டதாக ஆங்கில நாளேடு கூறியது.

பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறிக் கொள்வதற்கு மாறாக அவர் மலேசியர் என்பதை மலேசிய போலீசார் மேற்கொண்ட புலனாய்வு வழி தெரிய வந்துள்ளது. என்றாலும் அவர் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத பிலிப்பீன்ஸ் பாஸ்போர்ட் ஒன்றையும் வைத்திருந்தார்.

தென் பிலிப்பீன்ஸில் உள்ள விசாயாஸ், மிண்டானோ தீவுகளில் தமது Aman Futures Group என்ற நிறுவனத்தின் மூலம் 15,000 பேரிடமிருந்து 12 பில்லியன் பெசோவை (895 மில்லியன் ரிங்கிட்) மோசடி செய்ததற்காக பிலிப்பீன்ஸ் போலீசார் தேடியதைத் தொடர்ந்து அமாலிலியோ சபாவுக்குத் தப்பி ஒடி விட்டார்.

இதனிடையே அமாலிலியோ பிலிப்பீன்ஸ் பிரஜை என்பதை பிலிப்பீன்ஸ் அமலாக்க அதிகாரிகள் திரட்டிய அவருடைய பிறப்புச் சான்றிதழ், பிலிப்பீன்ஸ் பாஸ்போர்ட் மூலம் தெரிய வந்துள்ளதாக பிலிப்பீன்ஸ் உள்துறை அமைச்சர் மார்க் ரோஸாஸ் கூறிக் கொண்டார்.

அமாலிலியோ பிலிப்பீன்ஸுக்குக் கொண்டு செல்லப்படுவதை சபா முதலமைச்சர் மூசா  அமான் நிறுத்தி விட்டதாகவும் அவர் சொன்னார். அமாலிலியோ சட்ட நடவடிக்கையை எதிர்நோக்க அவரை பிலிப்பீன்ஸுக்குக் கொண்டு வர அந்த நாட்டு அதிபர் பெனிக்னோ எஸ் அக்கினோ சூளுரைத்துள்ளார்.

பிலிப்பீன்ஸ் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் மணிலாவுக்கு அமாலிலியோ புறப்படுவதற்கு பத்து நிமிடங்கள் இருக்கும் போது சபா போலீசார் அவர் திருப்பி அனுப்பபடுவதை நிறுத்தி விட்டதாக பிலிப்பீன்ஸ் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடைசி நேரத் தலையீட்டுக்கு சபா போலீசார் தெளிவான பொருத்தமான காரணத்தைக் கொடுக்கவில்லை என்றும் அவை தெரிவித்தன.

அமாலிலியோ ‘தூரத்து உறவினர்’ என்பதை ஒப்புக் கொண்ட மூசா அவர் திருப்பி அனுப்பப்படுவதில் தாம் தலையிட்டதாக சொல்லப்படுவதை மறுத்தார்.

அமாலிலியோவை திருப்பி அனுப்பும் நடவடிக்கை, நடைமுறைகளை பின்பற்றாததால் தாம் அதில் தலையிட்டதாக சபா போலீஸ் தலைவர் ஹம்சா தாயிப் தெரிவித்துள்ளார்.