கேஎல் மேயர் வாரிசான் மெர்டேகா பற்றி என்ஜிஓ-உடன் பேச மறுத்தார்

1ngoபெர்தஹான் தாமான் மெர்டேகா நெகாரா (பிடிஎம்என்) என்னும் என்ஜிஓ, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வாரிசான் மெர்டேகா கோபுரத் திட்டம் பற்றி விவாதிக்க அனுமதிகேட்டு கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல் தாலிப்புக்கு மூன்று கடிதங்கள் அனுப்பி விட்டுக் காத்திருந்தது. பதில் வரவில்லை.

1ngo1இனியும் பொறுப்பதற்கில்லை என்று புறப்பட்டு மேயரைச் சந்திக்க இன்று அவரது அலுவலகத்துக்கே சென்று விட்டது அந்த என்ஜிஓ.

“அந்தத் திட்டத்தை (மக்களுடன் ஆலோசனை கலக்காமல்) ஏன் தொடங்கினீர்கள் என்று கேட்க விரும்பினோம், அவ்வளவுதான். அவருடன் விவாதம் செய்யும் எண்ணமெல்லாம் கிடையாது. ஆனால், இங்கு வந்தால் அவரைச் சந்திக்கக்கூட முடியவில்லை”, என்று பிடிஎம்என் தலைவர் ஈஷாக் சுரின் கூறினார். அவர் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)க் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

கோலாலும்பூர் மக்கள் அவர்களின் மேயரை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் மக்களின் தேவைகளுக்குக் கவனம் செலுத்துவார் என்று ஈஷாக் கூறினார்.

1ngo2தாங்கள் மேயர் அஹ்மட் பீசலின் சிறப்பு உதவியாளர் ஒருவரை, அஸ்னான் என்பவரைத்தான் சந்திக்க முடிந்தது, அதுவும் 10-நிமிடம் மட்டுமே உரையாட முடிந்தது என்றாரவர்.

பிடிஎம்என் பேராளர்கள் நால்வர் மட்டுமே மேயர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியில் நிற்க வேண்டியதாயிற்று.

பிடிஎம்என் மார்ச் 9-இல், மேயரைச் சந்தித்து கலந்துரையாட விரும்புவதை அஸ்னானிடம் தெரிவித்ததாகவும் அவர் என்ஜிஓ-வின் விருப்பத்தை மேயரிடம் தெரிவிக்க ஒப்ப்புக்கொண்டார் என்றும் ஈஷாக் கூறினார்.

பிடிஎம்என் போராட்டத்துக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்வு ஒன்று நடத்தப்படும் என்றும் ஈஷாக் தெரிவித்தார்.

118-மாடி வாரிசான் மெர்டேகா கோபுரம் கட்டுவதற்கு பிடிஎம்என் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இதன் தொடர்பில் ஜனவரி 5-இல், அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மெர்டேகா அரங்கத்துக்கு ஊர்வலமாகச் சென்று ‘118-மாடி மெகா கோபுரம் தேவை இல்லை என்போம்’ என்ற இயக்கத்தைத் தொடக்கினர்.

உடைக்கப்பட்ட தாமான் மெர்டேகா பூங்காவையும் அதன் சுற்றுப்புறப் பகுதியையும் திருப்பிக் கொடுத்து அவற்றைத் தேசிய பாரம்பரிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்றவர்கள் வலியுறுத்தினர்.