சபா கள்ளக் குடியேற்றக்காரர்கள் பிரச்னையை விசாரிக்கும் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணைய நடவடிக்கைகளில் இசி என்ற தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடர்பில் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என எல்லாத் தரப்புக்களையும் அந்த ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆர்சிஐ தனது பணிகளைத் தொடரும் வேளையில் அதன் நடவடிக்கைகளில் எழுப்பப்படும் விஷயங்கள் மீது யாரும் கருத்துச் சொல்லக் கூடாது என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூச்சிங்கில் நிருபர்களிடம் கூறினார்.
“நடவடிக்கைகள் முடியும் வரையில் எதனையும் முடிவு செய்ய வேண்டாம். இசி மீது விருப்பம் போல் குற்றம் சாட்ட வேண்டாம். ஆர்சிஐ புலனாய்வு இன்னும் முடியவில்லை,” என்றார் அவர்.
“இப்போது கருத்துச் சொல்வது திரைப்படம் ஒன்றின் முடிவு குறித்து முன் கூட்டியே சொல்வதைப் போன்றதாகும்.”
“திரைப்படத்தின் கால் பகுதியில் கதாநாயகன் சுட்டுக் கொல்லபடுவதாக தோன்றுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டதாக உடனே முடிவு செய்து விடக் கூடாது. அவர் மயக்க நிலையில் இருந்தார் என இறுதியில் சொல்லப்படுகின்றது.”
13வது பொதுத் தேர்தலுக்கு ஆயத்தங்களைச் செய்வதற்காக சரவாக்கிற்கு 78 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் அப்துல் அஜிஸ் வெளியிட்டார்.
சரவாக் பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
முன்னதாக அவர் சரவாக்கில் பொதுத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட எட்டு அரசு சாரா அமைப்புக்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
பெர்னாமா