அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அதிகரித்து வருவது குறித்து கூறப்படுகின்ற குறைகூறல்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அந்த பற்றாக்குறையை “இன்னும் சமாளிக்க முடியும்” என்றார் அவர்.
“தற்போது 5.4 விழுக்காடாக இருக்கும் பற்றாக்குறை 4.7 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.
“அந்தப் பற்றாக்குறையை 5.4 விழுக்காட்டுக்குக் குறைப்பதாக நாங்கள் சொன்னோம். இவ்வாண்டு நாங்கள் அதனை சாதித்து விட்டோம். மொத்த கடன் சுமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். நாம் மிகவும் சௌகரியமான சூழ்நிலையில் இருக்கிறோம்,” என்றார் அவர்.
“2008ம் ஆண்டு கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கு அரசாங்கம் 12.8 பில்லியன் ரிங்கிட்டை செலவு செய்தது. அந்தத் தொகை 2012ல் 20.5 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும்- அது கிட்டத்தட்ட 60 விழுக்காடு உயர்வுக்கு சமமாகும்.”
நஜிப்பின் 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்கள்”உண்மை நிலைக்கு மாறானவை” என்றும் அதிகரித்து வரும் நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறையை சமாளிக்கத் தவறி விட்டது என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.
“பற்றாக்குறை உயர்வு, செலவின அடிப்படையில் கூட சரி செய்யப்படவே இல்லை, அடுத்த மூன்று மாதங்களில் இன்னொரு பெரிய கூடுதல் ஒதுக்கீடு சமர்பிக்கப்படும் என நான் சந்தேகிக்கிறேன்,” என்றார் அன்வார்.
“அது தேர்தல் தந்திரம் என்பது தெளிவான விஷயம்,” எனக் குறிப்பிட்ட அவர், பக்காத்தான் ராக்யாட்டின் மாற்று வரவு செலவுத் திட்டத்திலிருந்து அது எடுக்கப்பட்டதாகக் கூறிக் கொண்டார்.