13வது பொதுத் தேர்தலுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என இசி அம்பிகாவை எச்சரிக்கிறது

wan13வது பொதுத் தேர்தலுக்கு சுமூகமாக நடைபெறும் பொருட்டு அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் (இசி) பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை கடுமையாக எச்சரித்துள்ளது.

வெளிநாட்டு மலேசிய வாக்காளர்கள் தொடர்பான அம்பிகா அறிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மீதான பொது மக்களுடைய நம்பிக்கையை பாதித்துள்ளதாகவும் இசி  துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறினார்.

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் தொடர்பில் அம்பிகா விடுத்த அறிக்கையை சாடிய வான் அகமட், தாயகம் திரும்புவதற்கு நேரமும் நிதியும் இல்லாதவர்களுக்கு அஞ்சல் வழி வாக்களிப்பதற்கு இசி உண்மையில் வாய்ப்பு அளிப்பதாகச் சொன்னார்.

“அம்பிகா குழப்பத்தைத் தரும் ஊகமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது இசி-க்கு உதவுவதாக இல்லை. மாறாக அதன் மீதான நம்பிக்கையை மேலும் சிதறடிக்கின்றது. அஞ்சல் வாக்குகள் மூலமாக வாக்களிக்கலாம். அல்லது வாக்களிக்க நேரடியாக தாயகம் திரும்பலாம்.”

“இசி-யின் நடைமுறைகளையும் வெளியுறவு அமைச்சுடனும் எல்லாத் தூதரகங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்ட நடைமுறைகளையும் அம்பிகா புரிந்து கொள்ளவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. அவரது அறிக்கை ஊகங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில்லாத விஷயங்கள் மூலம் மக்கள் மனதில் நஞ்சைக் கலக்கும் நோக்கத்தைக் கொண்டது,” என்றும் வான் அகமட் சொன்னார்.

“அவர்கள் உண்மையில் மலேசியர்களா ?”

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தாயகம் திரும்பி வாக்களிக்க வேண்டும் என்றும் அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அம்பிகா விடுத்துள்ள அறிக்கை குறித்து வான் அகமட் கருத்துரைத்தார்.wan1

வெளிநாடுகளில் வசிக்கும் ஒருவர் அஞ்சல் வாக்காளராவதற்கு இசி விதித்துள்ள நிபந்தனைகள் குழப்பத்தைத் தருவதாக அம்பிகா குறிப்பிட்டிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தாயகம் திரும்பியிருப்பதோடு 30 நாட்களுக்குக் குறையாமல் இங்கு தங்கியிருக்கவும் வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்றாகும். 

இதனிடையே பினாங்கைச் சேர்ந்த வழக்குரைஞரான ரஞ்சித் சிங் டில்லோன், அம்பிகாவைச் சாடியுள்ளதாகவும் இசி விதித்துள்ள நிபந்தனைகள் பொருத்தமானவை என்றும் அவர் சொன்னதாகவும் உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

“அவர்கள் இந்த நாட்டில் இருப்பதற்கு ஐந்து ஆண்டுகளில் 30 நாட்களைக் கூட தியாகம் செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் உண்மையில் மலேசியர்கள்தானா ?” என ரஞ்சித் வினவினார்.

வாக்காளர் என்ற முறையில் அவர்களுடைய விசுவாசத்தையும் நாட்டுப்பற்றையும் உறுதி செய்வதற்காக இசி அந்த நிபந்தனைகளை விதித்துள்ளதாக அவர் கூறியதாகவும் அம்னோவுக்கு சொந்தமான அந்த ஏடு தெரிவித்தது.

வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவருமான அம்பிகா அத்தகைய அறிக்கையை வெளியிட்டது ஏமாற்றத்தைத் தருவதாகவும் ரஞ்சித் மேலும் சொன்னார்.