உலக அளவில் உரிமைகளுக்காக போராடும் தரப்பான எம்னெஸ்டி இண்டர்நேசனல், மலேசியாவில், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி “பெரும் குறைபாடுடைய” புதிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரையும் விடுவிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என மலேசியாவை வலியுறுத்தியுள்ளது.
இரு ஆடவரும் ஒரு பெண்ணும் “பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு”த் திட்டமிடவும் ஆள்சேர்க்கவும் முயன்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்று கைது செய்யப்பட்டதை மலேசிய போலீஸ் விடுத்துள்ள அறிக்கை உறுதிப்படுத்தியது.
புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதன்முதலாக தடுத்து வைக்கப்படும் நபர்களாக அவர்கள் இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
கடும் குறைகூறலுக்கு இலக்கான காலனித்துவ-காலத்திய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்துக்குப் பதிலாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கம் கடந்த ஆண்டு கொண்டு வந்த புதிய சட்டம்தான் பாதுகாப்புக் குற்ற (சிறப்பு நடவடிக்கை)ச் சட்டம் அல்லது சோஸ்மா. Security Offences (Special Measures) Act.
ஆனால், புதிய சட்டம் எந்தக் காரணமுமின்றி ஒருவரை 28 நாள்களுக்கு தடுத்துவைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதால் இதுவும் குறைகூறலுக்கு இலக்கானது. பழைய ஐஎஸ்ஏ காலவரையின்றி ஒருவரைத் தடுத்து வைக்க இடமளித்தது.
சந்தேகத்தின்பேரில் கைதானவர்கள் “அனைத்துலக மனித உரிமை தரங்களுக்கு ஏற்புடையதல்லாத பெரும் குறைபாடுடைய ஒரு சட்டத்தின்கீழ்” தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று லண்டனில் தளம் கொண்டுள்ள எம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியது.
“சோஸ்மாவின்கீழ் நடந்துள்ள இந்த முதலாவது கைது நடவடிக்கை, மலேசிய அதிகாரிகள் ஒரு கொடுரமான சட்டத்துக்குப் பதிலாக இன்னொன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது”, என்று அந்த அமைப்பின் ஆசிய-பசிபிக் வட்டார துணை இயக்குனர் இசபெல் ஆர்ராடோன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
“மலேசிய அதிகாரிகள் பாதுகாப்பு என்ற பெயரில் மனித உரிமைகளை விட்டுக்கொடுத்துவிடக்கூடாது. புதிய பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக திருத்த வேண்டும் அல்லது அகற்ற வேண்டும்”.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஒருவர் யாசிட் சுவாட்(வலம்). அல்கைடா தொடர்புள்ள ஜும்மா இஸ்லாமியா அமைப்பின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் யாசிட், 2001-இலிருந்து 2008வரை ஐஎஸ்ஏ-இல் தடுத்து வைக்கப்பட்டவராவார்.