சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியுவின் சிறப்பு உதவியாளர் ஜப்ரி நோர்டின், இன்று திடீரென பதவி விலகினார். ரோனிமீதும் டிஏபிமீதும் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகவே பதவி விலகுவதாக அவர் இன்று பினாங்கில் அறிவித்தார்.
தம் குடும்பம் மற்றும் தமது பாதுகாப்பை எண்ணி அஞ்சித்தான் பதவி விலகல் அறிவிப்பை சிலாங்கூரில் செய்யாமல் பினாங்கில் செய்வதாகவும் அவர் கூறினார்.
அவர், 2009-இல் பிகேஆரிலிருந்து வெளியேறிய நிபோங் தெபால் எம்பி டான் டீ பெங் (வலம்)-கின் வீட்டில் அந்த அறிவிப்பைச் செய்தார்.
“அடுத்த சில நாள்களில் பதவிவிலகல் கடிதத்தைக் கொடுப்பேன்”, என்றாரவர்.
“நம்பிக்கை குறைந்ததாலும் ஏமாற்றமடைந்ததாலும்” பதவி விலகுவதாக ஜப்ரி கூறினார். ஊழல் செய்ததாகவும் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு லியு தகுந்த விளக்கம் அளிக்கத் தவறிவிட்டார் என்றாரவர்.
சிலாங்கூர் டிஏபி பாஸையோ பிகேஆரையோ மதிப்பதில்லை
“லியுவும் டிஏஎபி-யும் சிலாங்கூரில் பாஸையோ பிகேஆரையோ மதிப்பதில்லை”. அவ்விரு கட்சிகளையும் கழட்டிவிடவும் உள்ளடி வேலைகள் நடப்பதாகவும் அவர் சொன்னார். அதன் மூலமாக பக்காத்தானில் மாநில டிஏபி-யைச் செல்வாக்குமிக்க கட்சியாக வைத்துக்கொள்வதே அவர்களின் திட்டம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லியுவும் டிஏபி-யும் சிலாங்கூரில் பாஸுக்கும் பிகேஆருக்கும் குழிபறிக்கப் போட்ட திட்டங்கள் அனைத்தும் தமக்குத் தெரியும் என்றாரவர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் பார்டி கித்தா தலைவர் சைட் இப்ராமை டிஏபி வேட்பாளராகக் களம் இறக்குவதும் அவர்களின் திட்டங்களில் அடங்கும் என்றவர் குறிப்பிட்டார்.
டிஏபி, மந்திரி புசார் காலிட் இப்ராகிமை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய மாநில அரசை அமைக்கத் திட்டமிடுவதாக ஜப்ரி கூறினார். மந்திரி புசாரை ‘Khalid Gagap’அல்லது ‘பதற்றம்கொண்ட காலிட்’ என்றுதான் முத்திரை குத்தி வைத்துள்ளனர் என்றார்.
இதன் தொடர்பில் லியுவைத் தொடர்புகொண்டபோது அவர், ஜப்ரி தம் சிறப்பு உதவியாளர் என்பதையே மறுத்தார். தம் உதவியாளர்களை மூன்றாண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டதாக அவர் தெரிவித்தார்.
2010-இல் தமது உதவியாளர்களில் ஒருவராக இருந்த கிள்ளான் முனிசிபல் கவுன்சிலர் டீ பூன் ஹொக், அவருக்கு வேண்டியவர்களுக்கு குத்தகை ஒப்பந்தங்களைப் பெற தமது முகவரி கொண்ட கடிதத்தாள்களைப் பயன்படுத்திய விவகாரம் தெரிய வந்ததை அடுத்து உதவியாளர்கள் அனைவரும் நிறுத்தப்பட்டதாக ரோனி கூறினார்.
‘ஜப்ரி நியமனக் கடிதத்தைக் காட்ட முடியுமா?’
ஜப்ரி உதவியாளராக இருந்து அதற்காக சம்பளம் அல்லது அலவன்ஸ் பெற்றிருந்தால் அதற்கான சான்றுகளைக் காட்டட்டும் என்று ரோனி(வலம்) சவால் விடுத்தார்.
தம் உதவியாளர் என்று கூறும் ஜப்ரி எதற்காக பினாங்கில் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரோனி வினவினார்.
“அவர் சொல்வதெல்லாம் பொய்”, என்றார்.
“2008-இல் நண்பர் ஒருவர் அவரை அறிமுகப்படுத்தினார். தம்மை ஒரு பொறியாளர் என்றும் திறமைசாலி என்றும் கூறிக்கொண்டு தன்னார்வலராக இருந்து உதவிசெய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
“ஒன்றிரண்டு முறை அவரிடம் வேலை கொடுத்துச் சோதனை செய்து பார்த்ததில் அவர் சொன்னதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது. அதன்பின் அவரது சேவையைப் பயன்படுத்தியது இல்லை”, என்று லியு கூறினார்.
“அவர் எனக்குத் தெரியாமல் வர்த்தக அட்டை ஒன்றை அச்சடித்து அதில் என் உதவியாளர் என்று குறிப்பிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்”.
ஜப்ரி மாநில நிர்வாகம் பற்றி எதுவும் தெரியாதவர் என்று லியு குறிப்பிட்டார். தெரிந்திருந்தால் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அவர்கள் டிஏபி, பாஸ், பிகேஆர் என எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும், அவர்களுக்கும் மந்திரி புசாருக்குமிடையில் நல்லுறவு நிலவுவதை அறிந்து வைத்திருப்பார் என்றார்.

























