பாதுகாப்புக் குற்றச் சட்ட(சோஸ்மா)த்தின்கீழ் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர்மீது பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்ததாக இன்று அம்பாங் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
“நீங்கள் ஒரு சித்தாந்த நோக்கில் தெரிந்தே பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்து வந்துள்ளீர்கள். உங்கள் செயல்கள் சீரியா நாட்டு சிவிலியன்களுக்குப் பாதகமானவை”, என்று யாசிட் சுவாட் (வலம்) மீதான குற்றப்பத்திரிகை குறிப்பிட்டது.
அவருக்கு உடந்தையாக இருந்தார் என்று ஹலிமா உசேன்மீதும் அதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சோஸ்மாவின்கீழ் கைதான மூன்றாவது நபரான முகம்மட் ஹில்மி ஹசிமின் நிலவரம்தான் தெரியவில்லை.
யாசிட்டும் ஹலிமாவும்தான் குற்றவியல் சட்டத்தின் பகுதி 130ஜி(ஏ)-இன்கீழ் முதன்முதலாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்கள். இச்சட்டத்தின்கீழ் குற்றவாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டால் 30ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
அம்பாங் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் வாதுரை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஏனென்றால் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படுவோருக்குப் பிணையும் வழங்கப்பட மாட்டாது.
எனவே அவர்களின் வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதாக அரசாங்க வழக்குரைஞர் இஷாக் முகம்மட் யூசுப் செய்தியாளர்களிடம் கூறினார். அந்நீதிமன்றம்தான் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை அறிவிக்கும் என்றாரவர். .