பினாங்கில் நடத்தப்படும் பிஎன் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு மக்கள் மூன்று வண்ணங்களிலான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் லிம் குவான் எங் ‘முட்டாள்’ துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிய கருத்து ‘இனவாதத் தன்மையைக்’ கொண்டது எனச் சாடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை மீது வருத்தம் தெரிவித்த லிம், தம்மை நேரடியாக அவமானப்படுத்தும் பொருட்டு முஹைடின் ஒர் ‘இனவாத’ அறிக்கையை விடுத்திருப்பதால் தாம் மிகவும் புண்பட்டுள்ளதாகச் சொன்னார்.
“மலாய்க்காரர்களாக உள்ள மற்ற பக்காத்தான் ராக்யாட் மந்திரி புசார்கள் மீது முஹைடின் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதே இல்லை,” என லிம் இன்று விடுத்த அறிக்கையில் கூறினார்.
“இது அவருடைய இனவாத நடத்தையைக் காட்டுகின்றது. என் மீது பயன்படுத்தப்பட்ட அந்த ‘bodoh’ (முட்டாள்) என்ற சொல் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது,” என அவர் மேலும் கூறினார்.
“பக்காத்தானில் உள்ள மலாய் மந்திரி புசார் மீது அவர் அதனைப் பயன்படுத்தியதில்லை. நான் மட்டும் ஒரே ஒரு சீன முதலமைச்சராக இருப்பதால் அவர் என் மீது அதனைப் பயன்படுத்தியுள்ளார்,” என லிம் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 11ம் தேதி கொரிய இசைப்பாடகர் Psy பங்கு கொள்ளும் பிஎன் நிகழ்வுக்குச் செல்கின்றவர்கள் பெர்சே-க்கு மஞ்சள் நிறத்திலும் சுற்றுச்சூழலுக்கு பச்சை நிறத்திலும் மாற்றத்துக்கு சிவப்பு நிறத்திலும் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என லிம் தெரிவித்த யோசனை குறித்துக் கருத்துரைத்த முஹைடின், லிம்-மை ‘முட்டாள்’ எனக் கூறினார்.
லிம் அரசியல் விளையாடுவதாகவும் ஒற்றுமையை மேம்படுத்தும் மகிழ்ச்சியான நிகழ்வான பிஎன் திறந்த இல்ல உபசரிப்புக்கு லிம் இடையூறு செய்வதாகவும் துணைப் பிரதமர் குற்றம் சாட்டினார்.
ஹான் சியாங் கல்லூரி வளாகத்தில் அந்தத் திறந்த இல்ல உபசரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அவர்களது நிகழ்வுகளுக்கு கறுப்பு அல்லது நீல நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறு கூறி பிஎன் இடையூறு செய்யாது. அது ‘முட்டாள்தனமான காரியமாகத்’ தெரிகிறது. தாம் புத்திசாலி என அவர் நினைக்கிறார். ஆனால் உண்மையில் அவர் அப்படி அல்ல,” என முஹைடின் சொன்னார்.
‘துணைப் பிரதமர் உணரவில்லை’
முஹைடின் கருத்துக்கள் லிம்-மின் அறிக்கையையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் லிம்மை நேரடியாக அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்ட போது சீனப் புத்தாண்டு காலத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்பதை உணராதவராக இருப்பதாக லிம் குறிப்பிட்டார்.
பினாங்கில் Psy நிகழ்வு போன்ற சிறிய விஷயம் தொடர்பில் தம்மை துணைப் பிரதமர் மிகவும் மோசமாக தாக்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
“சிலாங்கூரில் தண்ணீர் பிரச்னை போன்ற பெரிய விஷயங்கள் உள்ளன. ஆனால் முஹைடின் அத்தகைய சொல்லைப் பயன்படுத்தியதே இல்லை. அது மரியாதைக் குறைவையே காட்டுகிறது,” என அவர் மேலும் சொன்னார்.
“பிஎன் மாறவில்லை என்பதையும் அது காட்டியுள்ளது. சிறுத்தையின் வரிகள் மாறுவதே இல்லை. பிஎன்-னும் தனது இனவாதத் தன்மையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை,” என்றார் பினாங்கு முதலமைச்சர்.
பிப்ரவரி 11 திறந்த இல்ல உபசரிப்புக்கு தமக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அழைப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் லிம் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில பிஎன் இளைஞர் தலைவர் ஒ தொங் கியோங் திங்கட்கிழமை கூறியிருந்தார்.
மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களான -அப்துல் மாலிக் காசிம் (பிகேஆர்-பத்து மாவ்ங்), வோங் ஹோன் வாய் (டிஏபி-ஆயர் ஹீத்தாம்) பீ பூன் போ (டிஏபி சுங்கை பூயூ) ஆகியோரும் தங்களுக்கு பிஎன் அழைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் அந்த நிகழ்வுக்கு அழையா விருந்தினர்களாகப் போக முடியாது,” என மாநில பிகேஆர் உதவித் தலைவருமான அப்துல் மாலிக் சொன்னார்.