நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி முடிகிறது

நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி முடிகிறது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

அந்தத் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படா விட்டால் அந்தத் தேதியில் அது இயல்பாகவே கலைக்கப்பட்டு விடும் என தேர்தல் ஆணையத் துணைச் செயலாளர் நூர்டின் சே இங்கா கூறினார்.

“நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தேதி பிரதமரைப் பொறுத்ததாகும். ஆனால் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதிக்கு முன்னதாக அது கலைக்கப்படா விட்டால் அந்தத் தேதியன்று நாடாளுமன்றம் இயல்பாகவே கலைக்கப்பட்டு விடும்,” என அவர் கோத்தா பாருவில் தேசிய விவசாயத் தொழில் முனையம் மீதான விளக்கக் கூட்டத்தில் சொன்னார்.

அந்த நிகழ்வில் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட், தற்காப்பு அமைச்சர் டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி , பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜமில் கிர் பாஹாரோம் நிதித் துணை அமைச்சர் டாக்டர் அவாங் அடெக் ஹுசேன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த நிகழ்வில் 15,000க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களும் பொது மக்களும் பங்கு கொண்டனர்.

தேசிய பாத்வா மன்ற பதிலுக்காக காத்திருக்கிறோம்

அந்தத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் 13வது பொதுத் தேர்தலை நடத்தும் எனவும் நுர்டின் குறிப்பிட்டார்.

தேர்தல் மோசடியைத் தடுப்பதற்காக வாக்களிப்பு நடைமுறையில் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தும் யோசனை பற்றிக் கருத்துரைத்த அவர், அதன் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் இன்னும் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

அதன் தொடர்பில் அந்த மையை பயன்படுத்துவது மீது தேசிய பாத்வா மன்றத்தின் முடிவுக்கும் தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது என்றார் அவர்.

வாக்காளர்கள் கேட்டுக் கொண்டால் தவிர ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு வாக்காளர்களை மாற்றும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்றும் நுர்டின் சொன்னார்.

பெர்னாமா