செமிஞ்கி டெனுடின் தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் 22 பேருக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தருவதற்கு இன்சே கென்னத் தோட்டத்துடன் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இன்று காலை மணி 10.30 க்கு அந்த ஒப்பந்தம் இஞ்சே கென்னத் தோட்ட உரிமையாளருக்கும் சம்பந்தப்பட்ட 22 முன்னாள் தொழிலாளர்களுக்கும் இடையில் காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் எஸ். அருட்செல்வன் அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது. அருட்செல்வன் மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தலைமைச் செயலாளரும் ஆவார்.
நூறு வருடங்களுக்கு மேலான வரலாற்றை கொண்ட டெனுடின் தோட்டம் கடந்த 50 ஆண்டுகளாக உள்ளூர் முதலாளிகளின் நிருவாகத்தில் இருந்து வந்துள்ளது. 1970களில் அத்தோட்டத்தில் 300 குடும்பங்கள் இருந்தன. தற்போது 22 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.
இத்தோட்டத்தின் 22 குடும்பங்களுக்கான வீடுகள் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கி இவ்விவகாரத்தை கையாள்வதற்கு எஸ். அருட்செல்வனை இதற்கான பணிப் படை உறுப்பினராக நியமித்தது.
இன்று நடைபெற்ற இந்த இலவச மாற்று வீடுகள் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட 22 டெனுடின் தோட்ட முன்னாள் தொழிலாளர்களும், கென்னத் பப்ளிக் லிமிடெட் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி அஹமட் பின் அப்துல் காடரும், எஸ். அருட்செல்வனும் கலந்து கொண்டனர்.