மசீச ‘மக்கள் நிலைத்தன்மை பேருந்து’ என்ற பெயரில் நடமாடும் செராமா வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
செராஸில் இன்று பண்டார் துன் ரசாக்கில் நிகழ்ந்த அதன் ஆண்டு சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது பிரச்சார மேடையாகவும் பயன்படுத்தப்படும் அந்த வாகனம் அறிமுகமானது.
அந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு வந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர், பிஎன் தலைவர்கள் ஆகியோர் அந்தப் பேருந்துக்குள் நுழைந்து இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் சென்றனர்.
பின்னர் பிஎன் தலைவர்கள் மேடையில் இருந்தவாறு கூட்டத்தினரை நோக்கிக் கைகளை அசைத்தனர்.
அந்தப் பேருந்தின் இரு பக்கத்திலும் நஜிப்பும் மசீச தலைவர் சுவா சொய் லெக்-கும் காணப்படும் பெரிய படங்கள் வரையப்பட்டிருந்தன.
பிகேஆர் கட்சியின் பிரச்சாரப் பஸ், டிஏபி-யின் ‘உபா’ வாகனங்கள் ஆகியவற்றுக்குப் பின்னர் பிரச்சார பஸ்_ஸை வாங்கியுள்ள மூன்றாவது கட்சி மசீச ஆகும்.
அந்த எல்லா வாகனங்களையும் பிரச்சார மேடைகளாகவும் பயன்படுத்த முடியும்.
குழப்பம் ஏதுமில்லாத மலேசிய பல இன சமுதாயத்தில் நிலைத்தன்மையை வலியுறுத்தும் மசீச பிரச்சார இயக்கத்தை அந்தப் பேருந்து குறிப்பதாக சுவா விளக்கினார்.
“அந்தப் பஸ் நிலைத்தன்மையைப் பிரதிநிதிக்கிறது. அந்த பஸ்-ஸை பின்பற்றுகின்றவர்கள் மலேசியாவின் நிலைத்தன்மையை ஆதரிக்க வேண்டும்,” என்றார் அவர்.
அந்த திறந்த இல்ல உபசரிப்பில் எல்லா இனங்களையும் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பல வகையான உணவுகளும் பரிமாறப்பட்டன. பல இனக் கலைஞர்கள் மேடையில் பாடல்களையும் நடனங்களையும் வழங்கினர்.
நஜிப், சுவா ஆகியோருடன் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், கூட்டரசு அமைச்சர்கள், பிஎன் அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகமட், அப்துல்லா படாவி ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

























