கர்பால் : பினாங்கு மக்கள் பிஎன்-னை நிராகரிப்பது தெளிவாகி விட்டது

limபினாங்கில் நேற்று நடைபெற்ற பிஎன் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது பிஎன் -னுக்குத் தயாரா என பினாங்கு மக்களைக் கேட்ட பிரதமர் நஜிப் ரசாக்கை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார்.

நஜிப் எழுப்பிய கேள்விக்கு கூட்டத்தினர் அளித்த பதில் பினாங்கு மக்கள் பிஎன் -னை நிராகரிப்பதை தெளிவாக காட்டி விட்டது என கர்பால் சொன்னார்.

“நீங்கள்  பிஎன் -னுக்குத் தயாரா என நஜிப் மூன்று முறை கூட்டத்தினரை நோக்கிக் கேட்ட போது அதற்கு அவர்கள் ‘இல்லை’ என உரத்த குரலில் பதில் கூறினர்,” என கர்பால் இன்று காலை பினாங்கில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

karpal“Psy-க்கு ஒவ்வொருவரும் ‘ஆமாம்’ என்றனர். ஆனால் பிஎன் என வரும் போது ஒரு முறை மட்டுமல்ல, மூன்று முறை ‘இல்லை,” எனச் சொல்லப்பட்டதாக அந்த புக்கிட் குளுகோர் எம்பி தெரிவித்தார்.

பதில் தெரிய வேண்டும் என ஆர்வமாக இருந்ததால் நஜிப் அந்தக் கேள்வியை தொடுத்திருக்க வேண்டும் என அவர் கருதுகிறார். அவருக்கு கூட்டத்தினருடைய பதில் கிடைத்து விட்டது.

அன்வார் டிஏபி-யின் தேர்வு

பதில் மிகத் தெளிவாக இருக்கும் போது ஒரே கேள்வியை மூன்று முறை தொடுத்த நஜிப் ‘மிகவும் கெட்டிக்காரராக நடந்து கொள்ளவில்லை’ என்றும் கர்பால் சொன்னார்.

“அத்தகைய சூழ்நிலையில் ஒர் அரசியல்வாதி பாதகமான சூழலையும் சாதகமாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு விவேகமாக இருக்க வேண்டும்.”

வரும் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் கைப்பற்றுமானால் அடுத்த பிரதமராவதற்கு மிகவும் தகுதியான வேட்பாளர் பிகேஆர் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்த்தரப்புத் தலைவருமான அன்வாரே என்று கர்பால் மீண்டும் வலியுறுத்தினார்.

பிரதமர் பொறுப்புக்கு டிஏபி தேர்வு செய்ததை பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் அங்கீகரித்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர், மலேசியாவை வழி நடத்துவதற்கு அவரே சிறந்த மனிதர் என்றார்.

 

TAGS: