மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு கடாசான்டுசுன் சமூகத்தின் ‘ஹுகுவான் சியோவ்(பிரதான தலைவர்) பட்டம் வழங்கப்பட்டதற்கு சாபாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அப்பட்டம், நடப்பு பிபிஎஸ் தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கானுக்கு 28 ஆண்டுகளுக்குமுன் கொடுக்கப்பட்டு பின்னர் அவரே ஆயுளுக்கும் அச்சமூகத்தின் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டார்.
அப்பட்டம் அன்வாருக்கு வழங்கப்பட்டது குறித்து கருத்துரைக்க மறுத்த உப்கோ தலைவர் பெர்னார்ட் டெம்போக்(வலம்), அதை ஒரு “கோமாளிக் கூத்து” என்று வருணித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
அன்வார் அப்பட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என செபாங்கார் எம்பி எரிக் மஜிம்புன் கூறினார். அவர் அதை ஏற்றுக்கொண்டது கடாசான்டுசுன் சமூகத்தைப் பொருத்தவரை மரியாதைக் குறைவான செயலாகும் என்றார்.
சாபா மாநில சீர்திருத்தக் கட்சி(ஸ்டார்)த் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான், கடாசான்டுசுன் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கூடி அப்படிப்பட்ட பட்டத்தைக் கொடுத்தது அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு செயலாகும் என்று குறிப்பிட்டார்.
“அரசியல் ஆதாயம் பெற இவ்வளவு மட்டமாகவா நடந்து கொள்வது? மானக்கேடான செயல்”, என்று அவர் கூறியதாக அச்செய்தித்தாள் கூறிற்று.
உப்கோ தகவல் பிரிவுத் தலைவர் டோனல்ட் மொஜுண்டின் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பட்டத்தை வழங்குவது பொருத்தமற்றது என்றார். ,
“என்னைப் பொருத்தவரை ‘ஹுகுவான் சியோவ்’ என்பது ஒரு கடாசான் சித்தாந்தம். அதை கடாசான் சமூகத்தைச் சேராத ஒருவருக்குக் கொடுப்பது மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும். அது கடாசான் சமூகத்தை இழிவுபடுத்தும் செயலுமாகும்”.
அரசியல் ஆதாயத்துக்காக கலாச்சாரத்தைப் பலியிடக்கூடாது என்றவர் சொன்னார்.
இதைப் பற்றிக் கருத்துரைத்த அந்நாளேடு, ஹுகுவான் சியோவ் பட்டம் என்பது கடாசான்டுசுன் சமூகத்தின் தலைவராக போற்றப்படுவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது என்றும் அதை வழங்கும் அதிகாரம் கடாசான்டுசுன் கலாச்சார சங்கத்துக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியது. அதை அன்வாருக்கு வழங்கியதால் மாற்றரசுக் கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகள் குறையலாம் என்றது குறிப்பிட்டது.
ஹுகுவான் சியோவ் இடம் காலியாக இருந்தால் மட்டுமே அப்பட்டம் ஒருவருக்குக் கொடுக்கப்படும். அதுவும் அவசரப் பேராளர் கூட்டம் நடத்தப்பட்டு அப்பட்டம் வழங்கப்படுவது வழக்கம்..