பாட்ரிக் தியோவின் முகநூல் பதிவு தொடர்பில் போலீஸ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது

teohவானொலி அறிவிப்பாளரும் நடிகருமான பாட்ரிக் தியோ தமது முகநூல் பக்கத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது மீது அவரது வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

பிப்ரவரி 6ம் தேதி அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அவர் தமது வாக்குமூலத்தைக் கொடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது தியோவின் வழக்குரைஞரும் உடனிருந்தார்.

குற்றவியல் சட்டத்தின் 298ஏ பிரிவின் கீழ் தியோ விசாரிக்கப்படுவதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒற்றுமை சீர்குலைவதற்கு அல்லது வெறுப்பைத் தூண்டுவதற்கு சமய அடிப்படையை பயன்படுத்துவதைக் குற்றம் என அந்தப் பிரிவு கூறுகின்றது.

தியோ குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

பிப்ரவரி 15ம் தேதி அலோர் ஸ்டாரில் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஒரே மலேசியா சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் சம்பந்தப்பட்ட கலைஞர்களும் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என கெடா பாஸ் அரசாங்கம் விதித்த வழிமுறைகளைக் குறைகூறி தியோ தமது முகநூலில் பக்கத்தில் ஜனவரி 15ம் தேதி எழுதிய பின்னர் இணையக் குடிமக்கள் அவரை கண்டித்தனர்.

கலைஞர்கள் முறையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்றும் பாடகர்கள் தன்முனைப்பு பாடல்களைப் பாட வேண்டும் என்றும் கெடா ஆட்சி மன்றம் விதித்த நடைமுறைகள் கூறின.

அந்த முன்னாள் வானொலி அறிவிப்பாளர் தமது முகநூல் பதிவுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் மனதைப் புண்படுத்தும் அந்தப் பதிவையும் தமது பக்கத்திலிருந்து அகற்றி விட்டார்.

என்றாலும் தியோவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் உட்பட பல தரப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.