தமிழின அழிப்பிற்காக ஐநா மீதான கண்டனமும் பரிந்துரைகளும்

memo_to_UN2009-ஆம் ஆண்டில் நடந்த போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் நடந்த இன அழிப்பு,  இன ஒழிப்பு, போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரணை செய்வதற்குச் சுயேட்சை ஆணையம் ஒன்றை அமைக்க ஐநா செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த ஆண்டு ஐநா வெளியிட்ட சார்ல்ஸ் பெட்றே அறிக்கை கூறுகிறது என்ற வற்புறுத்தலுடன் கூடிய மனு  இன்று முற்பகல் மணி 12 அளவில் கோலாலம்பூர், ஐக்கிய நாட்டு சபையின் அதிகாரியிடம் வழங்கப்பட்டது. (காணொளி)

மேலும், ஐநா தலைமைச் செயலாளருக்கு இலங்கை மீது விசாரணை  செய்யக்கோரும் அதிகாரம், ஐநா சட்ட விதி 99-இல் உள்ளதால் அதை பயன்படுத்துமாறும்  கேட்டுக்கொள்ளப்பட்டது.

இலங்கை மீதிலான மலேசிய நாடாளுமன்றக்  கூட்டமைப்பின்  ஆதரவில் அரசு சார்பற்ற அமைப்புகள் அந்த கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர். பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்தும் தனிப்பட்ட முறையிலும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

memo_to_UN_02நாடு கடந்த தமிழீழ அரசின் மலேசிய ஒருங்கிணைப்பாளரும் சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவருமாகிய கா. ஆறுமுகம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்  மனோகரன் மாரிமுத்து, தமிழ் அறவாரியத் தலைவர் சி.பசுபதி,  டத்தோ ஹாஜி தஸ்லீம் முகமட் இப்ராஹிம்,  நகராண்மைக் கழக உறுப்பினர் குணராஜ், சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் சேகரன், கேமரன்மலை மலேசிய சோசியலிஸ்ட் கட்சி தலைவர் அமைச்சியப்பன், அதன் செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழு ஐ.நா பணிமனையில் அம்மனுவை வழங்கினர்.

அக்கோரிக்கை மனுவை அரசு சார்பற்ற அமைப்புகளின்  தலைவர்களிடமிருந்து ஐ.நா பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராஜேன்ர டேவ் பட்டேல் பெற்றுக்கொண்டார்.

memo_to_UN_03இறுதிகட்டப் போர் உக்கிரமாக கட்டவிழ்த்து விடப்படிருந்த காலக்கட்டதில் கூட இதே ஐநா சபை  அலுவலகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துத்  தமிழர்களைக்  காக்குமாறு மனு கொடுத்தோம். உலக தமிழர்கள் அனைவரும்  குரல் கொடுத்தார்கள்; மனு கொடுத்தார்கள். ஆனால் ஐநா சபை மக்களைக்  காக்கின்ற தனது பொறுப்பிலிருந்து தவறி விட்டது. அந்த வரலாற்று தவறைச் சரி செய்ய வேண்டிய மிக முக்கிய கால கட்டத்தில் ஐநா சபை இன்று இருக்கிறது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இந்த அதிநவீன காலத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்தும் மௌனமாக வேடிக்கை பார்த்த ஐ.நாவின் செயல் வருந்தத்தக்கது மட்டுமல்ல அது கடுமையான கண்டனத்திற்குரியது என்றார் இந்நிகழ்விற்குத் தலைமையேற்ற வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

இலங்கை அரசால் விசாரணை செய்ய பணிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பல நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்க அரசாங்கம் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து வெற்றியடைய செய்தது.

எனினும், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தாத சூழலில், இலங்கைக்கு எதிரான தனது 2-ஆவது தீர்மானத்தை வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரின்போது  அமெரிக்கா  முன்மொழியவுள்ளது.

memo_to_UN_04

இந்த தீர்மானத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும் தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா சபை  கைவிட்டிருந்ததைக்  கண்டனம் செய்யும் வகையிலும் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐ.நா தூதரத்திடம் இந்த கண்டன மனு சமர்பிக்கப்பட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை மீதிலான  மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பின் செயலாளருமான  மனோகரன் மாரிமுத்து கூறினார்.

2009-ல் தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இராணுவம் கொடூரமாக மேற்கொண்ட இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதில் சரணடைகிறோம் என்று ஐ.நாவிடம் அறிவித்து விட்டு வெளியேறியவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

“இவ்வளவு சான்றுகள் இருந்தும், இனிமேலும் ஐ.நா நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அதை மனிதகுலம் மன்னிக்காது” என்ற தமிழ் அறவாரியத் தலைவர் பசுபதி, நமது மலேசிய அரசாங்கமும் இலங்கை விசயத்தில்  கண்ணா மூச்சி ஆடாமல் தமிழர்களின் குரலை மதித்து, மனித உரிமைகள் சார்பில் இன-மத அடிப்படையில் வேறுபாடு காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.