செவ்வாய்க்கிழமை, சாபா, லாஹாட் டத்துவில் மலேசிய கடலெல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு கும்பலை மலேசியப் பாதுகாப்புப் படையினர் பிடித்து வைத்துள்ளனர். வெளிநாட்டவர்களான அவர்கள் இராணுவ உடை தரித்து கையில் ஆயுதங்களையும் வைத்திருந்தனர்.
அவர்கள், தென் பிலிப்பீன்சில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளின் விளைவாக மலேசிய எல்லைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ், இஸ்மாயில் ஒமார் கூறினார்.
அவர்களைச் சுற்றி வளைத்துகொண்ட ஆயுதப்படையினரும் போலீசாரும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடையுமாறு கும்பலுக்குக் கட்டளை இட்டனர்.
“நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மக்கள் கவலைகொள்ள வேண்டாம்”, என்றாரவர்.
100க்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் படகுகளில் லாஹாட் டத்து கடற்கரையில் வந்திறங்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவத்தினர்போல் உடை அணிந்திருந்ததுடன் ஆயுதங்களையும் ஏந்தி இருந்த அவர்கள் தென் பிலிப்பீன்சின் போராளித் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
ஆனால், அவர்கள் எதற்காக லாஹாட் டத்து வந்தார்கள், அதன்மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கம் எதுவும் அவர்களுக்கு உண்டா என்பதை நேற்றிரவு மணி 10வரை அதிகாரிகளால் உறுதிப்படுத்த இயலவில்லை.
அச்சம்பவம் தொடர்பில் போலீசுடன் அணுக்கமாக ஒத்துழைக்குமாறு ஆயுதப்படைகளுக்குக் கூறப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அவ்விவகாரம் மீது அறிக்கை வெளியிடுமாறு ஆயுதப் படைத் தலைவர் சுல்கிப்ளி பணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆனால், சுல்கிப்ளியைத் தொடர்புகொண்டபோது அவர் கருத்துரைக்க மறுத்தார்.
இதனிடையே, புக்கிட் அமான் சிறப்புப் பணிப்படை (நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு) இயக்குனர் முகம்மட் புஸி ஹருன், சாபா போலீசார் அவ்விவகாரத்தை விசாரித்து வருவதாகவும் அது பற்றி இப்போதைக்குக் கருத்துச் சொல்ல இயலாது என்றும் சொன்னார்.
“ஆயுதப்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விசாரணைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்படுவர்”, என்றாரவர்.
சாபா போலீஸ் ஆணையர் ஹம்சா தயிப்(இடம்), அவ்விவகாரம் மீது இன்று செய்தியாளர் கூட்டம் ஒன்று கூட்டப்படலாம் என்றார்.
இச்சம்பவம் 1985, செப்டம்பர் மாதம் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அதில், இராணுவ உடை தரித்து ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் லாஹாட் டத்துக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 11பேர் பலியானார்கள், பலர் காயமடைந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த ஸ்டேண்டர்ட் சார்டட் பேங்க் கிளையிலும் மலேசிய விமான நிறுவன அலுவலகத்திலும் புகுந்து ரிம200,000 பணத்தைக் கொள்ளையிட்டனர்.