பசுமை ஒருமைப்பாடு 109 என்ற தலைப்பைக் கொண்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக ஈராயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் குவாந்தானில் உள்ள தாமான் கெலோராவில் இன்று ஒன்று திரண்டனர்.
தங்களது சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுவதால் மருட்டலுக்கு இலக்காகி இருக்கும் சமூகங்களுக்கு ஆதரவு காட்டும்வகையில் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் போலீஸ் தலையீடு அவர்களின் உணர்வுகளை மட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டது.
பேச்சாளர்கள் அந்தப் பேரணியில் உரை நிகழ்த்துவதைப் போலீசார் தடுத்த பின்னர் அரை மணி நேரம் முன்னதாக பேரணி முடிவுக்கு வந்தது.
சுற்றுச்சுழல் பாதுகாப்புப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள பல அரசு சாரா அமைப்புக்கள் அந்தப் பேரணிக்குக் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
அந்த நிகழ்வுக்கு ஏற்கனவே போலீஸ் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேசிய சேவை நிகழ்வு ஒன்றுக்காக நேற்றிரவு அந்த அனுமதி ரத்துச் செய்யப்பட்டது.
பேரணி ஏற்பாட்டாளர்கள் அமைத்திருந்த கூடாரங்களை ஊராட்சி மன்ற அதிகாரிகள் நேற்று இரவிலேயே அகற்றி விட்டனர். அந்தக் கூடாரங்கள் “சட்டவிரோதமானவை” என அவர்கள் தெரிவித்தனர்
“ஜனநாயக நாட்டில் மக்கள் ஒன்று கூடி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை பெற்றுள்ளனர். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி மீட்டுக் கொள்ளப்பட்டது குறித்து நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அது சரி அல்ல,” சபா மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத் தலைவர் வோங் தாக் கூறினார்.
“சட்டவிரோதமானது” எனக் கூறப்பட்டாலும் காலை மணி 8.30 வரை பேரணி தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பேரணி பங்கேற்பாளர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் தலையிட்டு பேச்சாளர்களை தடுத்து நிறுத்தினர். கலகத் தடுப்புப் போலீசாரும் அங்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.
போலீசாரின் முன்னேற்றத்தை நிறுத்த ஆதரவாளர்கள் மனித கேடயத்தை அமைத்ததும் போலீசார் பின்வாங்கியதாகத் தோன்றியது. ஆனால் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்த பின்னர் அவர்கள் தொடர்ந்து முன்னேறத் தொடங்கினர்.
பேரணியில் பங்கு கொண்டுள்ளவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என குவாந்தான் ஒசிபிடி முகமட் ஜாஸ்மானி யூசோப் வற்புறுத்திய போது அவர்கள் போலீசாரை நோக்கி ஏக்காளமிட்டனர்.
பூமி சாசனம் அங்கீகரிக்கப்பட்டது
சூரிய உதயத்தை வரவேற்பதற்காக காலை 6 மணி தொடக்கம் அந்த கடற்கரையில் மக்கள் குவியத் தொடங்கினர். வானத்தில் சூரியனுடைய ஒளிக்கதிர் தோன்றியதும் பல்வேறு சமூகங்களின் பாரம்பரிய முரசொலியுடன் அது வரவேற்கப்பட்டது.
அந்த நிகழ்வில் பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், அதன் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான மரியா சின் அப்துல்லா, தெர்த்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ, டிராஸ் சட்டமன்ற உறுப்பினர் சொங் சியூ ஒன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
பூமி சாசனம் என்ற பதாதையின் கீழ் சுற்றுச் சூழல் போராளிகளும் ஆதரவாளர்களும் கூடினர். நிலையான மேம்பாடு, சுற்றுச் சூழல் மீது பொறுப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி உலகளாவிய சிவில் சமூக அமைப்புக்கள் செய்துள்ள அனைத்துலகப் பிரகடனம் பூமி சாசனம் ஆகும்.