தாம் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி செனட்டர் கேள்வி எழுப்புகிறார்

xenaponeமலேசியாவில் சுதந்திரமான தேர்தல்களுக்கு தாம் அழுத்தம் கொடுப்பதால் தம்மை திருப்பி அனுப்புமாறு அந்த நாட்டு அரசாங்கத்தின் ‘உயர் நிலையிலிருந்து’ ஆணை வந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் கூறுகிறார்.

கோலாலம்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர் மெல்பர்ன் விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களிடம் பேசினார்.

நேற்று அதிகாலையில் கோலாலம்பூர் சென்றடைந்த அவர் விசாரணை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் எனக் கூறப்பட்ட பின்னர் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

“மலேசியாவில் ஜனநாயக ஆதரவு இயக்கங்களுக்கு குறிப்பாக தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சேக்கு தாம் வாதாடுவதால் நான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும்,” என அவர் சொன்னார்.

செனபோன் ஏற்கனவே பல முறை மலேசியாவுக்கு சென்று வந்துள்ளார். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று மலேசியத் தேர்தல் முறையையும் அவர் ஆய்வு செய்துள்ளார்.

பெர்சே உறுப்பினர்கள், உயர் நிலை அரசாங்க அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆகியோரைச் சந்திக்க மலேசியாவுக்குச் செல்லவிருந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவில் செனபோனும்  ஒருவர் ஆவார்.

செனபோன் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் தங்கள் பயணத்தை ரத்துச் செய்து விட்டனர்.

மலேசிய அதிகாரிகள் தம்மை கால வரம்பு இல்லாத ‘நுழையக் கூடாதவர்கள்’ பட்டியலில் சேர்த்துள்ளதாகத் தெரிவித்த அவர் அது ‘அச்சுறுத்தும்’ நடவடிக்கை என்றார்.

தாம் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் எனக் கருதப்பட்டால் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ்  உட்பட பல முதுநிலை அதிகாரிகளைச் சந்திப்பதற்கான கூட்டங்களுக்குத்  எப்படி ஏற்பாடு செய்ய முடிந்தது என்றும் செனபோன் வினவினார்.

ஏஎப்பி