பக்காத்தான் இண்ட்ராபின் செயல்திட்டத்தை ‘இன்னமும் பரிசீலிக்கிறது’

1hind1பக்காதான் தலைவர்கள் இண்ட்ராபின் செயல் திட்டத்தை “அமலாக்கத்தக்கக் கொள்கைகளாகவும் சட்டத் திருத்தங்களாகவும்” மாற்றும் வழிமுறைகளை இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பக்காத்தான் “கொள்கை அளவில்” ஆதரிக்கும் அத்திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார்.

“செயல்திட்டம் எங்களின் தேர்தல் கொள்கை அறிக்கையுடன் ஒத்துப்போக வேண்டும். இல்லையேல் சிலர் அதையே (முரண்பாடுகளை) பெருங் குறையாகச் சொல்லிக் காட்டுவார்கள்.

“எனவே, எல்லாம் ஒத்துப்போவதையும் முறையாக இருப்பதையும் உறுதிப்படுத்த தாமதம் ஆகிறது.அதன்மீதான விவாதம் இண்ட்ராப் எதிர்பார்ப்பதைவிட  நீண்டு கொண்டு போவதை எண்ணிச் சந்தேகம் கொள்ள வேண்டாம்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

பக்காத்தான் தன்னுடைய செயல்திட்டத்தை அங்கீகரித்து ஒரு தேர்தல் உடன்பாட்டைச் செய்துகொள்ள வேண்டும் என்று இண்ட்ராப் நேற்று வலியுறுத்தி இருந்தது.

இல்லையேல், அக்கூட்டணி அதன் 25 நாடாளுமன்ற தொகுதிகளை இந்தியர் ஆதரவின்றி இழக்கும் அபாயம் ஏற்படும் என்று அவ்வியக்கம் எச்சரித்திருந்தது.

இண்ட்ராப் கோரிக்கை ஒரு விவகாரமல்ல

இண்ட்ராபின் கோரிக்கை நியாயமானதுதானா என்று கேட்டதற்கு அது ஒரு பிரச்னை அல்ல என்று தியான் சுவா கூறினார்.

பக்காத்தான் இண்ட்ராபுடன் ஒத்துழைக்கிறது என்றால் இண்ட்ராப் வாக்குகளைக் கொண்டுவரும் என்பதற்காக அல்ல. நாடற்றவர்களாகவுள்ள மலேசிய இந்தியர்களின் விவகாரம், நிர்க்கதிக்கு ஆளான தோட்டத்தொழிலாளர் நலன்கள் போன்றவை குறித்து அச்செயல்திட்டம் பேசுவது அதற்குப் பிடித்துள்ளது என்றாரவர்.

“பல தரப்புகள் ‘நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று கூறலாம். நாங்கள் அது எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகிறதா என்று பார்க்கிறோம்.

“வேறு சில தரப்புகள் இருக்கின்றன. நிறைய தொகுதிகள் நம் கைக்கு வர அவை உதவ முடியாதுதான். ஆனாலும் அவற்றுடன் நாம் ஒத்துழைக்கிறோம். ஏனென்றால், அவற்றின் கொள்கை நம் கொள்கையுடன் ஒத்துப்போகிறது”.   எனவேதான் இவ்விவகாரத்தில் பக்காத்தான் நிலைபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.

1hind ganesanஇதனிடையே, இண்ட்ராபின் தேசிய ஆலோசகர் என். கணேசன் (இடம்) பக்காத்தான் வெள்ளிக்கிழமைக்குள் ஒரு கூட்டம் நடத்தி இரு தரப்பு ஒத்துழைப்பு மீது இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று இன்று ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

“கடந்த சில மாதங்களாக பக்காத்தானுடன் இண்ட்ராப் நடத்திய கலந்துரையாடல்களில் மட்டுமீறிய தாமதம், புரிதலின்மை போன்ற காரணங்களால் முன்னேற்றம் காணப்படவில்லை. எனவே, ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது.

“பக்காத்தான் மலேசிய இந்திய வாக்காளர்கள்மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இண்ட்ராப் செயல்திட்டம் முன்வைக்கும் கோரிக்கைகளைத் ஆழ்ந்து ஆராய வேண்டும்.

“ஒளிவுமறைவு வேண்டாம், உண்மையைச் சொல்லுங்கள்”, என்று கணேசன் கூறினார்.