உள்துறை அமைச்சு விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதித்திருந்த தடையை அகற்றியுள்ளது. இஸ்லாத்தைத் தவறாகச் சித்திரிப்பதாகக் குறைகூறப்பட்ட அப்படத்தில் மேலும் சில காட்சிகள் நீக்கப்பட்டுத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் அப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் ராஜா அஸஹார் ராஜா அப்துல் மனாப் கூறினார்.
“சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைச் செவிமடுத்த பின்னர், விஸ்வரூபம் படத்தைத் திரை அரங்குகளில் திரையிடுவதற்கு அனுமதி அளிக்க அமைச்சு இணங்கியது.
“திரைப்பட விநியோகிப்பாளர்கள், நிபந்தனையை முழுமையாக பின்பற்ற வேண்டும். வாரியம் முடிவு செய்தபடி மேலும் சில காட்சிகளை நீக்க வேண்டும்”, என்று ராஜா அஸஹார் குறிப்பிட்டார்.
விஸ்வரூபம் படத்தில் கமல், அமெரிக்காவில் பயங்கரவாத நடவடிக்கைகள் நடப்பதைத் தடுக்க அல்-கைடா இயக்கத்துக்குள் ஊடுருவுகிறார்.
தமிழ்நாட்டிலும் தடை
அப்படத்துக்கு இந்திய மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது. ஆனால், தமிழ் நாட்டில் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநில அரசு அதற்குத் தடை போட்டது. அதைத் திரையிடுமுன்னர் சில காட்சிகளில் ஒலியைத் துண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.
இங்கு, இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா), இந்திய முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு (பெர்மிம்) ஆகியவை உள்துறை அமைச்சிடம் புகார் செய்ததை அடுத்து ஜனவரி 25-இல் அப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
அதன்பின்னர், படத்தில் சமயம், பாதுகாப்பு முதலிய அம்சங்களை ஆராய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) அதிகாரிகளையும் தணிக்கை வாரிய அதிகாரிகளையும் கொண்ட தனி வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது.
“படத்தின் உள்ளடக்கத்தை மதிப்பிட இரண்டு தடவை கூடி விவாதித்தோம்”, என்று ராஜா அஸஹார் தெரிவித்தார்.
அதன்பின்னர் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
ஆனால், விஸ்வரூபம் படத்துக்கான தடையை அகற்றுமுன்னர் அதிலிருந்து எத்தனை காட்சிகள் வெட்டப்பட்டன என்பது குறித்து ராஜா அஸஹார் கருத்துரைக்கவில்லை.