தெரெசா: வெள்ளத்துக்குக் காரணம் எல்ஆர்டி திட்டம், சிலாங்கூர் தவறு அல்ல

IOIபூச்சோங்கில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளத்துக்கு அங்கு மேற்கொள்ளப்படும் எல்ஆர்டி திட்டம் காரணமாகும். கால்வாய்களை சிலாங்கூர் அரசாங்கம் முறையாக பராமரிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது காரணமல்ல என சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தெரெசா கோக் கூறுகிறார்.

அந்தத் திட்டத்துக்கான கட்டுமானப் பொருட்கள் அந்தப் பகுதியிலிருந்து நீர் வெளியேறுவதை மட்டுப்படுத்தி விட்டது. அதனால் வெள்ளம் ஏற்பட்டு ஐஒஐ கட்டிடத் தொகுதியைச் சுற்றிலும் கார்கள் அதில் சிக்கிக் கொண்டதாக அவர் சொன்னார்.

“குப்பைகள் வெள்ளத்துக்கு சிறிதளவு வழிகோலியிருக்கலாம், ஆனால் வெள்ளத்துக்கு அது முக்கியக் காரணம் அல்ல. ஐஒஐ கட்டிடத் தொகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்படும் எல்ஆர்டி விரிவுத் திட்டமே காரணம்.”

“எப்படியோ எல்லா கட்டுமானப் பொருட்களும் அங்கு ஒன்று சேர்ந்து கால்வாய்களை அடைத்து விட்டன. அதனால் தண்ணீர் வெளியேறுவது குறைந்தது,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரெசா சொன்னார்.IOI1

ஐஒஐ கட்டிடத் தொகுதிக்கு முன்பு உள்ள டமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலைப் பகுதி மேட்டுப் பகுதியாகும். அங்கிருந்து தண்ணீர் வேகமாக தாழ்வான பகுதியில் உள்ள ஐஒஐ கட்டிடப் பகுதி வழியாக ஆற்றை அடைந்திருக்க வேண்டும் என அவர் விளக்கினார்.

ஆனால் கட்டுமானப் பொருட்கள் ஆற்று வேகத்தை குறைத்து விட்டன. அதனால் ஐஒஐ கட்டிடத் தொகுதியைச் சுற்றிலும் வெள்ளம் ஏற்பட்டு விட்டது.

IOI2“நாங்கள் அந்த எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கான முக்கிய குத்தகையாளரான Malaysian Resources Corperation Bhd-டிடம் பேசியுள்ளோம். கால்வாய்களை விரைவாக சீராக்கி, கிள்ளான் ஆற்றுக்குள் நீர் செல்ல வகை செய்யுமாறு அதனைக் கேட்டுக் கொண்டுள்ளோம்,” என அந்தப் பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினருமான கோக் தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசாங்கம் கால்வாய்களை முறையாக பராமரிக்கத் தவறியதால் அங்கு வெள்ளம் ஏற்பட்டதாக பிஎன் ஆதரவு அமைப்பான Gabungan Anti-Penyelewengan Selangor (Gaps) ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.