லாஹாட் டத்துவில் உள்ள கம்போங் தண்டுவோவில் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து நீடிக்கும் ஊடுருவல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு காண பேச்சுக்கள் நடத்த இன்னும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார்.
விரும்பத்தகாத சம்பவங்கள், ரத்தக் களறி அல்லது மரணங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேச்சுக்களுக்கு இன்னும் கதவுகள் திறந்துள்ளதாக அவர் சொன்னர்.
“எந்த சூழ்நிலையிலும் நாங்கள் சிறந்த வழியில் தீர்வு காண விரும்புகிரோம். அது தான் எங்கள் வழி முறை. உயிர்களைக் காப்பாற்றுவதற்கான எங்கள் வழி அது. அந்த விவகாரத்தைத் தீர்க்க உதவ முடியும் என சில தரப்புக்கள் கருதினால் நியாயமாக நடந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள். விரைவாக அந்தப் பிரச்னையை தீர்த்து விடலாம்.”
“பாதுகாப்புப் படைகள் தங்கள் பணியை செய்வதற்கு அனுமதிக்குமாறும் நான் எல்லாத் தரப்புக்களையும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்,” என லாஹாட் டத்துவில் பொது நடவடிக்கைப் படைத் தளத்தில் அந்த விவகாரம் பற்றி விளக்கம் பெற்ற பின்னர் ஹிஷாமுடின் நிருபர்களிடம் பேசினார்.
அந்த விவகாரன் மீது ஊகங்களையும் வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் எல்லாத் தரப்புக்களையும் கேட்டுக் கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவச் சீருடை அணிந்திருந்த, ஆயுதமேந்திய 100க்கும் மேற்பட்ட நபர்கள் படகுகள் மூலம் லாஹாட் டத்து கடற்கரையை சென்றடைந்தனர். அவர்கள் தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த சுலு சுல்தான் ஆதரவாளர்கள் என மலேசியப் போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.