லீனாஸ் தேர்தல் பிரச்னையாக்கப்பட வேண்டும், அம்பிகா

மக்கள் எதிர்கொள்ளும் லீனாஸ் மற்றும் இதர சுற்றுச்சூழல் இடர்பாடுகளை ஒரு தேர்தல் பிரச்னையாக்க வேண்டும் என்று பெர்சே 2.0 இன் தலைவர் அம்பிகா கேட்டுக்கொண்டார்.

“மக்கள் இதனை ஒரு தேர்தல் பிரச்னையாக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளிடம் லீனாஸ் குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்க வேண்டும்”, என்று இன்று பின்னேரத்தில் குவாந்தானின் அவர் கூறினார்.

முன்னதாக, “பசுமை ஒற்றுமை 109” பேரணிக்கு தமது ஆதரவை தெரிவித்த அம்பிகா, அரசாங்கம் மக்களின் கவலையைப் பொருட்படுத்தவில்லை என்று கூறினார்.

“இத்திட்டம் பாதுகாப்பானது என்று மக்களை நம்பவைப்பது பற்றியதல்ல இது. மக்களின் உணர்வு மற்றும் சமூகத்தின் மீதான சமூக மற்றும் நிதி ஆகியவற்றின் தாக்கம் போன்றவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது.”

ரேடியோ கதிரியக்க கசிவுகள் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்க அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“இது அரசாங்கம் பொய் சொல்கிறது என்பதல்ல. கடந்த காலத்தில் பல தடவைகளில் அரசாங்கம் முழு உண்மையையும் கூறவில்லை. ஆகவே, மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை.”

“லீனாஸை புத்ராஜெயாவில் கட்டுங்கள்”

லீனாஸ் பாதுகாப்பானது என்று கூறும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நேர்மையை நிரூபிக்க விரும்பினால், அவர்கள் கெபெங்கிற்கு சென்று தங்களுடைய எதிர்காலம் பற்றி அச்சமடைந்துள்ள உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அம்பிகா மேலும் கூறினார்.

மாற்றாக, நாட்டின் பெரும் அரசியல் தலைவர்களின் வீடுகளும் அலுவலகங்களும் இருக்கும் நாட்டின் நிருவாக தலைநகருக்கு அத்தொழிற்சாலையைக் கொண்டுபோகுமாறு அம்பிகா ஆலோசனை கூறினார்.

“அதை ஏன் அவர்கள் புத்ராஜெயாவுக்கு கொண்டுசெல்லக்கூடாது? அங்கு ஏராளமான காலி இடங்கள் இருக்கின்றன”, என்றாரவர்.