சிலாங்கூர் அரசு அம்மாநிலத்தில் நீர்வளத்தை நிர்வகிக்கக் குத்தகை பெற்றுள்ள நான்கு நிறுவனங்களையும் எடுத்துக்கொள்ள ரிம9.65 பில்லியன் கொடுக்க முன்வந்துள்ளது.
ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்(சபாஷ்), புஞ்சாக் நியாகா சென். பெர்ஹாட், கொன்சோர்டியம் அபாஸ் சென்.பெர்ஹாட், ஷியாரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹோல்டிங் (ஸ்ப்லேஷ்) ஆகிய நான்கு நிறுவனங்களுக்கும் அதன் தொடர்பில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை அவசியமானது என்று குறிப்பிட்ட சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், மாநிலத்தின் நீர் ஆதாரங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வகிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.
“அவற்றை அரசு எடுத்துக்கொள்வது மக்களின் வாழ்க்கைக்கு முக்கியமாகும். அதன்வழி சிலாங்கூர் மக்களுக்கு 20 கன மீட்டர் நீர் இலவசமாக தொடர்ந்து கிடைக்கும். நியாயமற்ற நீர்க்கட்டண உயர்வு போன்ற தொல்லைகளும் இருக்காது.
“நீர் மேலாண்மைத் தொழில் வெளிப்படையாகவும் திறமையாகவும் செயல்படுகின்ற நிலையை மக்கள் காண்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசே எடுத்து நடத்துவதால் நீராதாரத் தொழிலில் தனிப்பட்டவர்களும் தனி நிறுவனமும் கொண்டுள்ள ஏகபோக உரிமைக்கு முடிவு கட்டப்பட்டப்படும்”, என்று காலிட் கூறினார்..