பினாங்கைத் தளமாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு போராடும் இரண்டு அரசு சாரா அமைப்புக்கள் பிஎன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜாசா தலைமை இயக்குநர் புவாட் ஹசான் சொல்வதை அந்த இரு அமைப்புக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
ஜாசா என்பது தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் சிறப்பு விவகாரப் பிரிவு ஆகும்.
அந்தக் கருத்துக்கள் மீதும் தாசெக் பெடு, குனோங் இனாஸ் ஆகியவற்றிலும் கட்டுப்பாடற்ற வெட்டுமர நடவடிக்கைகள் பற்றி அவை ‘மௌனமாக’ இருக்கின்றன என அவர் சொல்லியிருப்பது மீதும் இரு அமைப்புக்களின் ஊழியர்களும் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்எம் முகமட் இட்ரிஸ் சொன்னார்.
பிப்ரவரி 19ம் தேதி அலோர் ஸ்டாரில் கூறப்பட்டதாக சொல்லப்படும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் “ஆதாரமற்றவை, மிகவும் அவதூறானவ” என அவர் குறிப்பிட்டார்.
“எனக்கு அந்த நபரை யார் என்று தெரியாது, ஆனால் அவரது அறிக்கை விஷமத்தனமானது, தேவையற்றது. நாங்கள் அரசாங்கத்தை வீழ்த்த முயலுவதாகவும் நாட்டுப்பற்றுடையவர்கள் அல்ல என்றும் அவர் சொல்வது நியாயமற்றது,” என இட்ரிஸ் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.
நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறோம் பல்வேறு சமூகங்களுடைய நன்மைக்காக நாங்கள் போராடியுள்ளோம்,” எனக் குறிப்பிட்ட அவர் தமது அலுவலக அறையில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த பத்திரிக்கை நறுக்குகளைச் சுட்டிக் காட்டினார்.
“அவர் சிறிய அரசியல் பணியாளாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் திடீரென முளைத்துக் கொண்டு அந்தக் கருத்துக்களை வெளியிடுகிறார். நாங்கள் செய்துள்ள பணிகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். நாங்கள் யாருக்கும் சாதகமாக நடந்து கொள்வதில்லை.”
பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் Sahabat Alam Malaysia-வும் சபா, சரவாக்கில் மேற்கொள்ளப்படும் வெட்டுமர நடவடிக்கைகளை கடுமையாகக் குறை கூறுகின்றன. ஆனால் கெடா அல்லது கிளந்தானில் மேற்கொள்ளப்படும் அது போன்ற நடவடிக்கைகள் மீது அவ்வாறு செய்வதில்லை என புவாட் சொன்னதாக மலாய் மொழி ஏடான கொஸ்மோ-வில் வெளியான செய்தி பற்றி இட்ரிஸ் கருத்துரைத்தார்.
“அவை பாஸ் வழி நடத்தும் கெடா அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூறுவது இல்லை. ஆனால் கூட்டரசு அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நாட்டுப்பற்று இல்லாதவர்களைப் போல அரசியல் சாயம் பூசுகின்றன,” என புவாட், பினாங்கில் antai Orang Muda நிகழ்வில் பங்கு கொண்ட 200 இளைஞர்களிடம் கூறினார்.
“அவற்றின் இரட்டைப் போக்கு அரசு சாரா அந்நிய அமைப்புக்களின் திட்டங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன. அவற்றுக்கு அந்த அந்நிய அமைப்புக்கள் நிதி வழங்கக் கூடும்,” என்றும் புவாட் கூறிக் கொண்டார்.
அந்த இரண்டு அரசு சாரா அமைப்புக்களையும் குறை சொல்வதற்கு முன்னர் உண்மை நிலவரங்களை புவாட் அறிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட இட்ரிஸ், முக்கியமான நீர் பிடிப்புப் பகுதியான உலு மூடா காட்டுப் பகுதியில் வெட்டுமர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு 2003ம் ஆண்டு முதல் அந்த இரு
அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன என்றார். அவர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் Sahabat Alam Malaysia ஆகியவற்றின் தலைவரும் ஆவார்.
லங்காவியில் குனோங் ராயா, சிக்-கில் ரிம்பா தெலோய், பெண்டாங்-கில் புக்கிட் பேராக், கூலிமில் குனோங் பொங்சு, பெடு, குனோங் இனாஸ் ஆகியவற்றில் காடுகள் அழிக்கப்படுவது பற்றி பத்திரிக்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவை கடிதம் எழுதியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.