பாண்டான் எம்பி ஒங் தி கியாட், தம்மை வரும் தேர்தலில் வேட்பாளராக நியமனம் செய்வதில்லை என்ற மசீச முடிவால் கலக்கமடையவில்லை. ஏனென்றால், பிஎன் வேட்பாளர்கள் பற்றி இறுதி முடிவு செய்பவர் பிஎன் தலைவரான நஜிப் அப்துல் ரசாக்தான் என்கிறார் அவர்.
இன்று தம் சேவை மையத்தில் செய்தியாளர் கூட்டம் நடத்திய ஒங், மசீச அறிவிப்பு தமக்கு வியப்பளிக்கவில்லை என்றார்.
“சொல்லப்போனால், இரண்டு, மூன்றாண்டுகளாகவே இதை எதிர்பார்த்தேன். வேட்பாளர்களை முடிவு செய்யும் உரிமை பிஎன் தலைவருக்குத்தான் உண்டு.
“சுவாவே போட்டியிடுவதாக இருந்தாலும் அதையும் பிஎன் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்”, என்றார்.
ஒங்குக்கு அவ்வட்டார மக்களின் ஆதரவு உண்டு என்பதைக் காண்பிக்க பாண்டான் மசீச தொகுதி உறுப்பினர்கள், பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள், அவ்வட்டார என்ஜிஓ-களின் உறுப்பினர்கள் முதலியோர் செய்தியாளர் கூட்டத்தில் அவரைச் சுற்றிலும் இருந்தனர்.
நேற்று மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், பாண்டான் தொகுதி வேட்பாளராக ஒங்-கை மசீச களமிறக்காது என்று அறிவித்திருந்ததற்கு பதிலளிப்பதற்காக ஒங் இன்று அச்செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார்.
ஒங்குக்கு பாண்டான் தொகுதி மசீச, பிஎன் பங்காளிக்கட்சிகள் அவ்வட்டார என்ஜிஓ-கள் ஆகியோரின் ஆதரவு இல்லை என்றும் சுவா கூறியிருந்தார்.
‘சுவா பாண்டானில் போட்டியிட வேண்டும்’
தேர்தல் பரப்புரையின்போது மசீச சின்னத்தைப் பயன்படுத்துவதில்லை என்றும் பிஎன் சின்னத்தையே பயன்படுத்தி வந்திருப்பதாகவும் ஒங் கூறினார்.
பிஎன்னும் அவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்கவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்தார். அவர் அத்தொகுதியைத் தற்காக்க அனுமதிக்கப்படுவார் என்று நஜிப் எதுவும் கோடி காட்டியுள்ளாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.
சுவா ஒருமுறை “எங்கு நின்றாலும் வெல்வேன்” என்று கூறியிருப்பதால் பாண்டானில் போட்டியிடத் தயாரா என்று அவருக்கு கிண்டலாக சவாலும் விடுத்தார் ஒங்.
அக்கூட்டத்தில் அம்னோ தாமான் செம்பாகா கிளைத் தலைவர் மாட் அரிஸ் யூசுப், சிலாங்கூர் கெராக்கான் இளைஞர் தலைவர் பென் லியு, மஇகா பாண்டான் தொகுதி இளைஞர் தலைவர் டி.எம். பத்மநாதன், அவ்வட்டார என்ஜிஓ-களின் பேராளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.