மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான், அதன் பத்தி எழுத்தாளர் ரிதுவான் டீ அப்துல்லா எழுதிய இனவாத கட்டுரையை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது.
பிப்ரவரி 18–இல் வெளியிடப்பட்ட அக்கட்டுரையைக் கண்டித்து பல அரசுசாரா அமைப்புகளின் பேராளர்கள் ஷா ஆலமில் அச்செய்தித்தாளை வெளியிடும் காராங்கிராப்பின் தலைமையகத்தை முற்றுகையிட்டு விளக்கமும் மன்னிப்பும் கோரியதை அடுத்து அது மன்னிப்பு கேட்டது.
அப்பேராளர்களை காராங்கிராப்பின் முன்வாசலில் சந்தித்த நாளேட்டின் நிர்வாக ஆலோசகர் அப்துல் ஜலில் அலி, கட்டுரை வெளியிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
“தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். சில நேரங்களில் சிலவற்றைக் கவனிக்க மறந்து விடுகிறோம். இது என்னுடைய கவனக்குறைவு. நான்தான் அதற்குப் பொறுப்பாசிரியர்.
“சினார் ஹரியான் எழுத்தாளர்களின் சார்பில் இத்தவற்றுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்”, என்றார்.
நாளை அந்த நாளேடு மன்னிப்பைப் பிரசுரிக்கும் என்று ஜலில் உறுதி கூறினார். பத்தி எழுத்தாளர் வியாழக்கிழமை மீண்டும் பத்தி எழுதும்போது மீண்டும் ஒரு தடவை மன்னிப்பு வெளியிடப்படும். அத்துடன் ரிதுவானையும் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்ளப்போவதாகவும் அவர் சொன்னார்.