பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கடற்கரையில் உள்ள தண்டுவோவில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று தரையிறங்கியுள்ள தகவல் வெளியானதும் அருகில் இருந்த லஹாட் டத்து நகரத்தில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் விரிவடைந்தன.
சபா கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமான லஹாட் டத்துவில் உள்ள ஜாலான் சிலாபுக்கான் வழியாக அந்த இழுபறி நிகழும் இடத்தை நோக்கி பல இராணுவ வாகனங்கள் சென்றன.
அந்த நகரில் பாதுகாப்புப் படை வீரர்கள் காவல் சுற்றுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதே வேளையில் ஹெலிகாப்டர்களும் கண்காணிப்புப் பணியில் அவ்வப்போது ஈடுபட்டுள்ளன.
அத்துடன் அந்த நகரத்தில் பல பகுதிகளில் குறிப்பாக ஜாலான் சிலாபுக்கானில் பல சாலைத் தடுப்புக்கள் போடப்பட்டுள்ளன.
பக்காபிட், துங்கு, பெல்டா குடியேற்றப் பகுதிகள் உட்பட ஜாலான் சிலாபுக்கான் நெடுகிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெல்டா பகுதியில் கூடுதலாக பாதுகாப்புப் படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
நிலவரம் குறித்து லஹாட் டத்து நகர மக்களிடையே பரபரப்பு காணப்பட்டாலும் சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடர்ந்தனர்.
அந்தப் பகுதியில் இராணுவ நடமாட்டம் அதிகமாக இருந்த போதிலும் பல கடைகளில் வியாபாரம் வழக்கம் போல நடைபெறுவதாக பிரிச்சார்ட் ஜிம்மி என்ற குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“இங்கு நிலைமை வழக்கம் போலவே காணப்படுகின்ரது. சில கடைகள் மூடப்பட்டுள்ள வேளையில் பல கடைகள் இன்னும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் பீதியடையவில்லை. காரணம் அதிகாரிகள் சாலைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியும்.”
“துங்குவுக்கு உயரே பல ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருக்கின்றன. கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் நான் இரவு நேரத்தில் நடந்து செல்வதற்கு அஞ்சுகிறேன்,” என பிரிச்சர்ட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஜாலான் சிலாபுக்கான் நெடுகிலும் வாழும் மக்களைத் தவிர மற்றவர்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.
தீவகற்பத்தைச் சேர்ந்த பலர் நகரிலிருந்து வெளியேறி விட்டனர்
பல கடைகள் மூடப்பட்டுள்ளதை இன்னொரு குடியிருப்பாளரான நிஹால் சிங் உறுதிப்படுத்தினார். ஊடுருவல் நிகழ்ந்த பின்னர் பல சீனக் குடியிருப்பாளர்கள் லஹாட் டத்து நகரத்திலிருந்து வெளியேறி விட்டதாக அவர் சொன்னார்.
“தீவகற்பத்தை சேர்ந்த பல சீனர்கள் நகரத்திலிருந்து புறப்பட்டு விட்டனர். சிலர் மற்ற நகரங்களுக்குச் சென்றுள்ளனர். சிலர் தீவகற்பத்துக்கும் திரும்பியிருக்கலாம்.”
“என்னையும் உட்பட சிலர் தங்கள் பிள்ளைகளைப் பாலர் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவில்லை,” என்றும் நிஹால் தெரிவித்தார்.
இதனிடையே சித்தி என மட்டும் தெரிவித்துக் கொண்ட இன்னொரு பெண்மணி, செம்பூர்ணாவுக்கு தாம் திரும்பிக் கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உடன் செல்ல ஏழு இராணுவ லாரிகள் செல்வதைக் கண்டதாகத் தெரிவித்தார். ஆனால் அந்த லாரிகள் காலியாக இருந்தன.
அந்தப் பகுதியில் ‘உள்ளுக்குள் பதற்றம் நிலவுவதாக’ அந்தோனி தியோ என்பவர் சொன்னார். பெல்டா சஹாபாட் பகுதியை நோக்கி பல இராணுவ வாகனங்கள் செல்வதை அவரும் பார்த்துள்ளார்.
ஆனால் பெல்டா சஹாபாட்டில் நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஆயுதமேந்திய கும்பல் ஊடுருவியதிலிருந்து அங்கு ஆழ்ந்த அமைதி நிலவுகிறது.
நிலைமை அச்சமூட்டுவதாக உள்ளது என்றும் தமது அலுவலகம் இழுபறி நிகழும் இடத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே இருப்பதால் தாம் அத்தகைய சூழ்நிலையில் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் லஹாட் டத்துவில் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் சொன்னார்.
அதிகாரிகள் வெளியிடும் அதிகாரத்துவ அறிக்கைகள் அங்குள்ள நிலைமையைப் பிரதிநிதிக்கவில்லை என அவர் கருதுகிறார்.
ஜாலான் சிலாபுக்கானில் வசிக்கும் இன்னொரு கிராமவாசியும் அதே கருத்தையே தெரிவித்தார்.
“ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றன. சாலையில் போக்குவரத்து குறைந்துள்ளது. நிலைமை பதற்றமாகவும் அச்சமாகவும் உள்ளது,” எனக் கூறிய அவர் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
அந்த ஊடுருவல்காரர்கள் தென் பிலிப்பீன்ஸில் இயங்கும் தீவிரவாத இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்பான அபு சாயாப்பைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் என லஹாட் டத்து மக்களிடையே ஊகங்கள் பரவியுள்ளன.