பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கூட்டரசு அரசாங்கம் 50 ஆண்டுகளுக்குமேலாக பினாங்கைப் புறக்கணித்து வந்திருப்பதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
“கூட்டரசு அரசாங்கம் பினாங்கில் பொதுப் போக்குவரத்தில் முதலீடு செய்ததில்லை. துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றிலும் முதலீடு செய்ததில்லை”, என லிம் இன்று டவுன் ஹாலில் (நகராட்சி மண்டபத்தில்) “Penang Paradigm” திட்டத்தைத் தொடக்கிவைத்தபோது கூறினார். சிந்தனைக் குழுவான பினாங்கு கழகம் அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
“நம் விமான நிலையத்தின் ஓடுபாதை லங்காவியில் உள்ளதைவிட சிறியது. ஏர்பஸ் 308 விமானம் பயணிகள் நிறைந்த நிலையில் ஓடுபாதையிலிருந்து எழும்புவதுகூட சிரமமாகும்.
“முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்த பினாங்கு நலிவடைந்து போகட்டும் என்று விடப்பட்டது”.
பினாங்கு துறைமுகம் 50, 60-களில் நாட்டின் மிகப் பெரிய துறைமுகமாக இருந்தது. இப்போது கிள்ளான் துறைமுகத்துக்கும் ஜோகூர் தஞ்சோங் பெலாபாஸ் துறைமுகத்துக்கும் சேவை செய்யும் துறைமுகமாக தரம் தாழ்ந்துவிட்டது.
9வது மலேசிய திட்டத்தில் உறுதிமொழி அளிக்கப்பட்டது[போல் பினாங்கு கடல்வழி பெரிய கப்பல்கள் வருவதற்கு வ்சதியாக இன்னும் ஆழப்படுத்தப்படவில்லை.
பட்டர்வர்த்தில் உள்ள பினாங்கின் தீர்வையற்ற வணிக மண்டலம் மிகவும் சிறியது.
சுமார் 200 பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பினாங்கை ஓர் அனைத்துலக, அறிவார்ந்த மாநிலமாக மாற்றுவதற்கான கட்டமைப்பைல்க் கொண்டிருக்கும் Penang Paradigm திட்டம் இரண்டு வாரங்களுக்குக் காட்சிக்கு வைக்கப்படும்.
பின்னூட்டம் பெறக் காட்சிக்கு வைக்கப்படுகிறது
அத்திட்டம் பினாங்கிலும் செபறாங் பிறையிலுமுள்ள நகராட்சி மண்டபங்களில் பொதுமக்களிடம் பின்னூட்டம் பெறுவதற்காக காட்சிக்கு வைக்கப்படும்.
அத்திட்டம் தொடர்பில் என்ஜிஓ-களுடனும் சமூக அமைப்புகளுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என பினாங்கு கழகம் கூறியது.
மாநிலத்தின் நன்மைக்காக பினாங்கு அரசு, மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க எப்போதும் தயாராக இருந்துள்ளது என்று லிம் குற்பிப்பிட்டார்.
“ஆனால், அவப்பேறாக மத்திய அரசு, பினாங்கு பெருந்திட்டத்தை மாநில அரசுடன் கூட்டாக மேற்கொள்வதாக 2011-இல் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.
“அதன் பொருட்டு மாநில அரசு பினாங்குக்காக தயாரித்திருந்த 2011-2015 செயல்திட்டத்தைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது”.
பினாங்கு பெருந்திட்டத்துக்கு வழி விடும் வகையில் அத்திட்டத்தைத் தள்ளி வைக்குமாறு பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜலா கேட்டுக்கொண்டதால் அவ்வாறு செய்யப்பட்டது என லிம் தெரிவித்தார்.
“ஆனால், அதன் பின்னர் பெருந்திட்டம் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை”, என்றாரவர்.