‘பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கை கொள்கைகளை மட்டுமே கொண்டது’

பக்காத்தான் ரக்யாட், அதன் 2013 தேர்தல் கொள்கைவிளக்க அறிக்கையில்  ஊராட்சித் தேர்தல், தகவல் உரிமைச் சட்டம், சொத்து அறிவிப்பு போன்ற அதன் இலட்சியங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும் அவற்றை அது மறந்துவிடவில்லை.

1limகொள்கைவிளக்க அறிக்கை, கொள்கைகளை மட்டுமே கொண்டது. அதில் அவைபோன்ற  முக்கியமான விசயங்கள் ‘விடுபட்டிருப்பதை’ச் சில தரப்பினர் குறைகூறுவது பற்றி டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கை வினவியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்குமுன் மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கம் பக்காதானுக்கு உண்டு. அவற்றை அது மறக்கவில்லை என்று லிம் விளக்கினார்.

“கொள்கைவிளக்க அறிக்கையில் எல்லா விவரங்களையும் சேர்க்க முடியாது. சேர்த்தால் அது மிகவும் தடித்துப் போகும்.மக்கள் படிப்பதற்கு ஆர்வம் கொள்ள மாட்டார்கள்”, என இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராவார் என்ற குறிப்பும் இல்லையே என்று வினவியதற்கு அது “கொள்கைகளைப் பற்றியது ஆளுமைகள் பற்றியது அல்ல”, என்றார்.

பக்காத்தானின் கொள்கைவிளக்க அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளைச் செயல்படுத்த பெரும்பணம் தேவைப்படும் என்று அம்னோ கூறியிருப்பதையும் அவர் மறுத்தார்.