பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் பிஎன் பதில் பெற விரும்பும் கேள்விகள்

newsபக்காத்தான் ராக்யாட்டின் 13வது பொதுத் தேர்தலுக்கான கொள்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டவுடன் பக்காத்தான் வாக்குறுதிகளை சிறுமைப்படுத்தும் கருத்துக்களை பிஎன் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் கருத்துக்கள் நாட்டின் முக்கிய நாளேடுகளில் இடம் பெற்றுள்ளன.

பக்காத்தான் உறுதிமொழிகள் வெற்று வாக்குறுதிகள் என்றும் தேர்தல் இனிப்புக்கள் என்றும் அவர்கள் வருணித்தனர்.

ஆக்கப்பூர்வமான கொள்கை விவாதத்திற்கு ஊக்கமூட்டும் பொருட்டு மலேசியாகினி இன்றைய நாளேடுகளில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை தொகுத்துத் தந்துள்ளது.

1) நெடுஞ்சாலை டோல் கட்டணங்களை ரத்துச் செய்வது

நெடுஞ்சாலை டோல் கட்டணங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்றால் 29 நெடுஞ்சாலை சலுகை பெற்றுள்ள நிறுவனங்களுக்கு அரசாங்கம் மொத்தம் 50 பில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அது தேசியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் பெரித்தா ஹரியானிடம் கூறினார்.

அதன் விளைவாக அரசாங்கத்தின் கடன் சுமை அதிகரிக்கும். கல்வி, சுகாதாரம், சமூக நலன் போன்ற துறைகளுக்கான ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

2) எரிபொருள் விலைக் குறைப்பு

எரிபொருள் விலையை குறைக்கும் யோசனை பொருத்தமானதாக இருக்காது என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறினார். ஏனெனில் அரசாங்கம் எரிபொருள் உதவித் தொகைக்காக பில்லியன் கணக்கில் செலவு செய்கிறது. அதனால் தென் கிழக்காசியாவில் மலேசிய எரிபொருள் விலை மிகவும் குறைவாக உள்ளது என்றார் அவர்.news1

2012ல் மட்டும் அரசாங்கம் எரிபொருள் உதவித் தொகையாக அரசாங்கம் 20 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அவர் சொன்னார். 2010-உடன் ஒப்பிடுகையில் அந்த உதவித் தொகை 58.7 விழுக்காடு அதிகமாகும். அதற்கு அனைத்துலக எரிபொருள் விலைகள் கூடியதே காரணமாகும்.

“எவ்வளவு குறைக்கப் போவதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. எரிபொருள் விலையை 20 சென் முதல் 50 சென் வரை குறைத்தால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 5.2 பில்லியன் ரிங்கிட் முதல் 13 பில்லியன் ரிங்கிட் வரையில் ஒதுக்க வேண்டியிருக்கும்.

“ஆகவே எதிர்க்கட்சிகளுடைய வாக்குறுதி நியாயமற்றது. அது நாட்டின் நிதிச் சுமையையே அதிகரிக்கும்,” என அவர் சொன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

உதவித் தொகைகள் கூடும் போது மக்களுக்கு நன்மை தரும் மற்ற விஷயங்கள் முடக்கப்பட்டு விடும் எனக் குறிப்பிட்ட இஸ்மாயில் எரிபொருள் உதவித் தொகை ஏழைகளைக் காட்டிலும் பணக்காரர்களுக்கே அதிக நன்மை தருவதை நினைவுபடுத்தினார்.

3) இலவச பொதுப் பல்கலைக்கழகக் கல்வி

இலவச பொதுப் பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின் சொன்னார்.

news2மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு அலவன்ஸ், தனியார் கல்விக் கூட மாணவர்களுக்கான உதவித் தொகை, தேசிய உயர் கல்வி கடன் நிதி நிறுவனத்தை ரத்துச் செய்வது போன்ற கல்வி தொடர்பான பக்காத்தான் வாக்குறுதிகள் அமலாக்கப்பட்டால் நாடு திவலாகி விடும் என அவர் எச்சரித்ததாக பெரித்தா ஹரியான் கூறியது.

தற்போது கல்விக் கட்டணங்களில் 85 முதல் 95 விழுக்காடு வரையில் அரசாங்கம் நிதி உதவி செய்வதாகக் குறிப்பிட்ட காலித், மாணவர்கள் 10 விழுக்காடு மட்டுமே செலுத்துவதாகச் சொன்னார்.

எடுத்துக்காட்டுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் ஐந்து ஆண்டு மருத்துவ பட்டப்படிப்புக்கு மொத்தம் 60,000 ரிங்கிட் மட்டுமே கட்டணமாக விதிக்கப்படுகிறது. அதே வேளையில் தனியார் கல்விக் கூடங்கள் 400,000 ரிங்கிட் வரையில் கட்டணம் வசூலிக்கின்றன என காலித் விளக்கினார்.

4) குறைந்த பட்ச சம்பளம் 1,100 ரிங்கிட்

பக்காத்தான் முன்மொழிந்துள்ள 1,100 ரிங்கிட் குறைந்த பட்சச் சம்பளம் பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என இளைஞர் விளையாட்டு அமைச்சர் சாபெரி சிக், தி ஸ்டார் நாளேட்டிடம் கூறினார். நடப்புக்  குறைந்த பட்ச சம்பளமான 900 ரிங்கிட்டுக்கு ஊழியர் சம்பளத்தை மாற்றம் செய்வதற்கே முதலாளிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.

5) வாக்குறுதிகளை எப்படி அமலாக்குவது ?

கணிசமாக நிதி வளங்கள் தேவைப்படும் எல்லா வாக்குறுதிகளையும் எப்படி அமலாக்க பக்காத்தான் எண்ணியுள்ளது என பிஎன் தலைவர்களும் ஏன் நாளேடுகளும் கூட கேள்வி எழுப்பியுள்ளன.

“அவர்கள் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கூட உறுதி அளிக்கலாம். ஆனால் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற எப்படி பணத்தை திரட்டப் போகிறார்கள் என்பதை அவர்கள் விளக்கவில்லை,” என சபா பிஎன் செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் வினவியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தத் தேர்தல் கொள்கை அறிக்கையை அமலாக்குவதற்கான விவரங்களை அளிக்குமாறும் அவர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு சவால் விடுத்தார்.

சீன நாளேடான சின் சியூ-வும் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை பற்றி கருத்துரைத்துள்ளது.

‘இனிப்பான வாக்குறுதிகள்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் “அதற்குப் பணம் எங்கிருந்து  வரும் ?” என அது வினவியது.

“பக்காத்தான் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வரி செலுத்துவோர் அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கும் என நான் கவலைப்படுகிறேன்,” என அது தெரிவித்தது. தனிநபர் வருமான வரியை குறைப்பது பற்றியோ அல்லது கூட்டுவது பற்றியோ அது ஒன்றும் தெரிவிக்கவில்லை என்பதையும் அந்த ஏடு சுட்டிக் காட்டியது.