அன்வார்: பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை

1indian1பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கை, இனங்களையெல்லாம் கடந்து செல்கிறது. அதில், இந்தியர்கள் உள்பட எந்தச் சமூகமும் புறக்கணிக்கப்படவில்லை என்கிறார் அன்வார் இப்ராகிம்.

பள்ளிகளை எடுதுக்காட்டாகக் குறிப்பிட்ட அன்வார், சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கும் மிஷனரி பள்ளிகளுக்கும் உதவி அளிக்கப்படும் என்றார்.

“குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே அது குறியாகக் கொள்ளவில்லை. இதுவே- மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கடாசான்கள், டாயாக்குகள்- என ஒவ்வொரு குடிமகனுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது, கவனம் செலுத்தப்படுகிறது என்பதற்கு உத்தரவாதமாகும்.

“நேற்றிரவு ஹுலு சிலாங்கூரில் இந்திய சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். கல்வி முக்கியமான பிரச்னை என்பதால் அதன் தொடர்பில் சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டார்கள். ஓரங்கட்டப்படுதல், சமூகத்தில் நிலவும் குற்றச்செயல்கள் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். இவற்றுக்கு இன அடிப்படையில் அல்லாமல் தேசிய ரீதியில் பக்காத்தானின் கொள்கையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.

“இது மக்கள் நலம்பேணும் கொள்கைவிளக்க அறிக்கை. இது உயரும் விலைவாசி, பொருள்கள், வெட்டுமரம், நல்ல நிர்வாகம், எல்லா வகைப் பள்ளிகளுக்கும் உதவியளித்தல் முதலிய விசயங்கள் பற்றிப் பேசுகிறது”.

இது பிஎன் கொள்கைவிளக்க அறிக்கை போன்றதல்ல என்பதை வலியுறுத்திய அன்வார் பக்காத்தானின் கொள்கைவிளக்க அறிக்கை இன எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது என்றார்.

பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கையில் இந்திய சமூகத்துக்கென தனிக்கொள்கைகள் குறிப்பிடப்படாதது ஏன் என்று கேட்டதற்கு அன்வார் இவ்வாறு விளக்கினார்.