பக்காத்தான் ராக்யாட் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் நீண்ட கால விளைவுகளைக் கொண்ட பல துணிச்சலான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவை மலேசியாவைன் அடித்தளத்தையே முற்றாக உருமாற்றி விடும்.
என்றாலும் மக்கள் ஒப்பந்தம் மக்கள் நம்பிக்கை எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆவணத்தில் சில அம்சங்கள் விடுபட்டுள்ளன. அது பக்காத்தான் கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளது.
மலேசியாகினி தேர்வு செய்த அந்த ஐந்து முக்கிய அம்சங்கள் வருமாறு:
1) பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)
அப்துல்லா அகமட் படாவி நிர்வாகம் தொடக்கம் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்வது பற்றி பிஎன் அரசாங்கம் யோசித்து வருகின்றது.
அதற்கான சட்டங்கள் 2009ல் நிறைவேற்றப்பட்ட போதிலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அவை அமலாக்கப்படும் எனத் தெரிகிறது.
கூட்டரசு அரசாங்கத்தின் கடன் சுமையைச் சமாளிப்பதற்கு ஜிஎஸ்டி அவசியம் என நஜிப் நிர்வாகம் வலியுறுத்துகிறது. தற்போது 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே வரி செலுத்துவதை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை விரிவடையும் என அது சொல்கிறது.
ஆனால் அந்த யோசனையை பக்காத்தான் எதிர்க்கிறது. புதிய வரி குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களுக்கு சுமையை அதிகரிக்கும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
என்றாலும் 2009ம் ஆண்டுக்கான பொருள், சேவை வரிச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான யோசனை எதுவும் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
2) இந்தியர்களும் மற்ற உடற்குறையுடைய சமூகங்களும்
ஒராங் அஸ்லி மக்கள் முதல் சபா, சரவாக்கில் உள்ள சுதேசி மக்கள் வரையில் நாட்டில் உள்ள பெரும்பாலான சிறுபான்மை இனங்களும் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தியர்களும் மற்ற உடற்குறையுடைய சமூகங்களும் விடுபட்டுப் போயுள்ளன.
இந்திய சமூகம் எதிர்நோக்கும் பல முக்கியப் பிரச்னைகளை இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நீண்ட காலமாக எழுப்பி வருகின்றது. சமமான பொருளாதார வாய்ப்புக்களைப் பெறுவது, தமிழ்ப் பள்ளிகளுக்கான நில உரிமைகள் ஆகியவை அந்தப் பிரச்னைகளில் அடங்கும். பினாங்கு, சிலாங்கூர் ஆகிய பக்காத்தான் மாநிலங்களில் அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படவே இல்லை.
உடற்குறையுடைய சமூகங்களுக்கான கொள்கைகளை பக்காத்தான் வெளியிடாததும் வினோதமாக இருக்கிறது. உடற்குறையுடையவர்களுக்கு ஊராட்சி மன்ற அமைப்புக்களில் பிரதிநிதிக்கப்படுவதை சிலாங்கூர், பினாங்கு அரசுகள் உறுதி செய்துள்ளன.
3) ஊராட்சி மன்றத் தேர்தல்கள்
1964ம் ஆண்டு ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் திறமையாகவும் நடைபெறுவதற்கு ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என டிஏபி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது.
அத்தகைய தேர்தல்களை அனுமதிக்கும் நோக்கம் கொண்ட சட்டத்தை டிஏபி தலைமையிலான பினாங்கு அரசாங்கம் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த விவகாரம் விரைவில் நீதிமன்றம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது வரை டிஏபி எடுத்துள்ள நடவடிக்கை அது தான். ஆனால் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் அந்த விஷயம் இடம் பெறாததைப் பார்க்கும் போது புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றினாலும் அதற்கு மேல் அது செல்லாது எனத் தெரிகிறது.
பாஸ், பிகேஆர் அந்த யோசனைக்கு ஆதரவாக இல்லை எனக் கருதப்படுகின்றது. ஊராட்சி மன்றங்களை நிர்வாகம் செய்கின்றவர்களை அரசியல் கட்சிகள் நியமிக்கும் நடப்பு நடைமுறையை அவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லப்படுகின்றது.
4) தகவல் சுதந்திரம்
பல நவீன ஜனநாயகங்களில் அரசாங்க ஆவணங்கள் மக்களுக்கு கிடைக்குமாறு செய்வது ஒர் உரிமையாகும். பினாங்கும் சிலாங்கூரும் அந்தச் சேவைக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. ஆனால் உண்மையில் அதற்கான நடைமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
அந்தச் சட்டங்கள் இப்போதைக்கு சிலாங்கூர், பினாங்கு நிர்வாகங்களுக்கு காட்சிப் பொருளாக இருக்கக் கூடும். அதனால் தகவல் சுதந்திரக் கொள்கை பக்காத்தான் கொள்கை அறிக்கையில் இடம் பெறவில்லை.
அதே வேளையில் பிஎன் -னும் அது போன்ற நடவடிக்கைகளை எதிர்க்கிறது.
5) சொத்துக்களை அறிவிப்பது
அரசாங்கப் பதவிகளை வகிக்கும் பிஎன் தலைவர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என பக்காத்தான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால் பக்காத்தான் தலைவர்கள் அவ்வாறு செய்வர் எனப் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் உறுதி கூறப்படவில்லை.
என்றாலும் சிலாங்கூர்,பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அந்த நடைமுறையை பக்காத்தான் அமலாக்கியுள்ளது. ஆனால் கெடாவும் கிளந்தானும் அதனைப் பின்பற்றவில்லை.