கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் நேற்று (26.03.2013) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விடுதலைப்பு புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை சிங்களப் பயங்கரவாத அரச படையினர், காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதற்கான புகைப்படங்கள் உட்பட இனப்படுகொலைக்கான பல ஆதாரங்கள் வெளிவந்ததையடுத்து உலகின் பல நாடுகளில் தமிழர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்கள் மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் இணைந்து இலங்கை தூதரகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், காவல்துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்லவேண்டும் என்று இட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது, அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டதால் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கைகலப்பு மூண்டது.
100 மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்த போதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இலங்கைத் தூதரகத்தை தாக்கினார்கள். இதனால் இலங்கை துதரக முன் வாசல் கதவு உடைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்துபோன இலங்கை தூதரக அதிகாரிகள், இலங்கைத் தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இலங்கை கொடியை பயத்தில் அகற்றி விட்டார்கள்.
இதனிடையே, தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பிரிக்பீல்ட்ஸ் தாமரைத் தடாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பிரார்த்தனைக்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.