சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி ஜெயகுமார் தமது தொகுதிக்கு அரசாங்கம் வழங்கும் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மீது எழுப்பிய கேள்வியை முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அவ்வாறு ஒதுக்கப்படும் பணம் எங்கே போகிறது என்பதை வெளிப்படைத் தன்மை அடிப்படையில் அரசாங்கத்தை கண்காணிப்பதற்கு நீதிமன்றம் ஒரு வழியாக இருக்கும் என ஜெயகுமார் கொண்டிருந்த நம்பிக்கைக்கு நீதிமன்ற முடிவு ஏமாற்றத்தைத் தந்து விட்டதாக அவரது வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.
மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு கடைசி அரணாக விளங்கும் நீதிமன்றம் ஒதுக்கப்படும் பணம் விரயமாகாமல் தடுப்பதற்கு ஆதரவாக முடிவு செய்திருக்க வேண்டும் என ஜெயகுமார் கூறினார்.
“நான் அந்தப் பணத்தை எனக்காக கேட்கவில்லை… ஒதுக்கப்படும் பணம் சரியான முறையில் செலவு செய்யப்படுவதை உறுதி செய்யவே நான் விரும்புகிறேன்… கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து எதிர்க்கட்சி எம்பி-க்களுக்கு நேரடியாக அந்த ஒதுக்கீடு கிடைப்பதில்லை… இந்த முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது.”
“இந்த முடிவைத் தொடர்ந்து மக்களுக்கு நான் வழங்கும் செய்தி இதுதான்: வெளிப்படையான போக்கை உறுதி செய்ய நாம் நீதிமன்றங்களை நம்பியிருக்க முடியாது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் சக்தியே அதனை முடிவு செய்ய வேண்டும்”, என்றார் ஜெயகுமார்.
முறையீட்டு நீதிமன்ற முடிவுக்கு எதிராக விண்ணப்பம் செய்து கொள்வதா இல்லையா என்பதை மலேசிய சோஷலிசக் கட்சியுடன் ஆலோசிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.
வழக்குரைஞர்கள் தங்கள் சேவைகளை இலவசமாக வழங்கி வந்த போதிலும் இறுதி வாய்ப்பான கூட்டரசு நீதிமன்றத்துக்கு செல்வதற்கு நிறையச் செலவு பிடிக்கும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
நீதிபதி அப்துல் வஹாப் பட்டெய்ல், நீதிபதி ஆனந்தம் காசிநாதர் ஆகியோருடன் அந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி லாவ் ஹாப் பிங் ஏகமனதாக கூட்டரசு அரசாங்கத்தின் முறையீட்டை ஏற்றுக் கொண்டு ஜெயகுமாருடைய விண்ணப்பத்தை நிராகரித்தார்.
சுங்கை சிப்புட் தொகுதிக்கு வழங்கப்படும் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செலவு செய்யப்படும் விவரங்களை கொடுக்க முடியாது என அரசாங்கம் கூறியதை எதிர்த்து ஜெயகுமார் நீதிமன்ற மறு ஆய்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
செப்டம்பர் 23ம் தேதி அதே நீதிமன்றம், நீதிமன்ற மறு ஆய்வை நிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து முறையீட்டு நீதிமன்றத்துக்கு அரசாங்கம் விண்ணப்பித்துக் கொண்டது.