அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு பிடிஎன் பயிற்சிகள் வழங்கப்படுவதை ஆதரிக்கிறார்

politikபிடிஎன் என அழைக்கப்படும் தேசிய குடியியல் பிரிவு வழங்கும் சர்ச்சைக்குரிய பயிற்சிகளை அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆதரித்துள்ளார்.

1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாங்கள் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது அரசாங்கக் கொள்கைகளை தாமும் தமது சகாக்களும் குறை கூற முடிந்ததாக அவர் சொன்னார்.

அவர் நேற்று ஷா அலாமில் மாணவர் அரசியல் ஈடுபாடு என்னும் தலைப்பில் நிகழ்ந்த ஆய்வரங்கில் உரையாற்றினார்.

“நாங்கள் அந்த நேரத்தில் அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தோம். எங்களுக்கு பிடித்தமான களம் பிடிஎன் பயிற்சிகளாகும். யார் நன்கு சிந்திக்கக் கூடியவர்கள்- பிடிஎன் அதிகாரிகள் அல்லது நாங்களா ? என்பதை சோதிப்பதற்கு நாங்கள் விரும்பினோம்,” என்றார் அவர்.

“மாணவர்கள் தம்மைப் பின்பற்றி பிடிஎன் பயிற்சிகளின் போது அரசாங்க யோசனைகளுக்குச் சவால் விடுக்க வேண்டும்.”

‘மூளைச்சலவை’ செய்யும் பயிற்சிகள் என அந்த பிடிஎன் பயிற்சிகள் குறை கூறப்பட்டு வந்துள்ளன.

“சந்தேகம் கொண்டுள்ள மாணவர்களுக்கு அங்கு அரசாங்கக் கொள்கைகள் விளக்கப்படுகின்றன. ஆகவே நாம் நன்கு சிந்தித்துப் பேசுவதற்கு அது தான் சிறந்த இடம். நாம் ‘எதிர்த்தரப்பினரா அல்லது இல்லையா’ என முத்திரை குத்தப்படுவது பற்றிக் கவலைப்படக் கூடாது,” என்றார் அவர்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் அதுவும் பிடிஎன் -னைப் பயன்படுத்தும்

அவரது கருத்துக்களை மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் அஸ்மிஹசானும் ஒப்புக் கொண்டார்.

“பிடிஎன் -னை கூட்டரசு அரசாங்கம் விரும்பினால் அதனை அது வைத்துக் கொள்ளட்டும். அது அரசாங்கத்தின் உரிமை. ஆனால் மாணவர்களுக்குச் சுயமாக சிந்திக்க முடியும்,” என்றார் அவர்.

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் பிடித்தாலும் அது தனது நன்மைக்காக பிடிஎன் -னைப் பயன்படுத்தும் என்றும் அஸ்மி வாதாடினார்.

“இப்போது ஆளும் கட்சியுடன் மட்டும் பிடிஎன் -னை இணைக்க வேண்டாம். அது அன்றைய அரசாங்கத்துடன் தொடர்புடையது. அன்றைய அரசாங்கத்தின் கொள்கைகளை பிடிஎன் விளக்குகிறது.”

அந்த ஆய்வரங்கில் பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட், மலேசிய இளைஞர் மன்ற துணைத் தலைவர் முவாமார் கடாபி ஜமால், Gabungan Mahasiswa Islam Semenanjung (Gamis) தலைவர் அஸான் சாபார் ஆகியோரும் உரையாற்றினார்கள்.