ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார்
ஒரு சுவாரசியமான, என்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில், 13வது பொதுத் தேர்தலின் முடிவு குறித்து ஆருடம் கூறப்படாத நாளோ பொழுதோ இல்லை எனலாம்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒன்றைச் சொல்வது பிறகு பல்டி அடிப்பது என்றிருப்பதால் நிறைய ஆதரவை இழந்து விட்டிருக்கிறார். 2009-இல் பிரதமர் பதவி ஏற்றபோது 2008-இல் இழந்ததைத் திரும்பப் பெறப்போவதாக வீரதீரப் பேச்சு பேசினார்.
இப்போது தேர்தலில் வெற்றிபெற்றால் போதும் என்ற நிலையில் இருக்கிறார்.
அந்தப் பரிதவிப்பில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்குகளை ‘விலை கொடுத்து’ வாங்கியுள்ளார். அண்மைக்காலமாக அவர் சில கோமாளித்தனங்களில் ஈடுபடுவதையும் கண்டு வருகிறோம்.
வானொலியில் மெண்டரின் மொழியில் பேசுவது, சீனப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல சீனப் பாரம்பரிய உடையில் வருவது, இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற அவர்களுக்கிடையில் ஜிப்பா அணிந்து உலவுவது -இவை சில எடுத்துக்காட்டுகள்.
யாராவது அவர் தலையில் கொட்டி, அவர் பிரதமர் என்பதை அவருக்கு நினைவூட்டினால் நன்றாக இருக்கும்.
கைகுலுக்குவதும் சாந்தா குளோஸ்போல் அன்பளிப்புகளை வழங்குவதும் அவருடைய வேலை அன்று.
அவருடைய முன்னுரிமைகளில் நாட்டைத் திறமையாக வழிநடத்துவது முதலிடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் தரமான வாழ்க்கை வாழ முடியும்.
இந்தியர்களின் வாக்கு தனக்குத்தான் என்ற நினைப்பில் மிதக்கிறது பிஎன். முன்பு, 2008-க்கு முன்பு இது உண்மைதான். ஆனால், இப்போது கதை மாறிவிட்டது. இந்திய வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.
மஇகா, ஐபிஎப், பிபிபி ஆகியவை இந்தியர் வாக்குகள் பிஎன் பக்கம் திரும்பி வருவதாகக் கூறிக்கொண்டாலும் இந்திய சமூகம் விழிப்பாக உள்ளது, இந்தக் கட்சிகள் தன்னை ஏமாற்றி விட்டதை அது உணர்கிறது.
அண்மையில் மஇகா வியூக இயக்குனரும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ச.சாமிவேலுவின் புதல்வருமான வேள்பாரி, மஇகா அம்னோவுக்கு அஞ்சுவதாகவும் அதனால் சமூக மேன்மைக்காகக் குரல் கொடுப்பதில்லை என்று வெடிப்புறப் பேசியுள்ளார்.
இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் பிஎன் கட்சிகளின் பரிதாபமான நிலையைச் சரியாகவே வருணித்துள்ளார்.
தவறான நம்பிக்கை ஊட்டி வியூகம் அமைக்கப்படுகிறது
அப்படிவானால், இந்திய மலேசியர்கள் பிஎன் பக்கம் வந்துவிட்டார்கள் என்று சொல்லி ஏமாற்றுவது ஏன்?
தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு வியூகம் அமைக்கப்பார்க்கிறார்கள். இது, பிஎன்னுக்கு ஆதரவாக சாய்ந்தால்- சாய்ந்த- பக்கம்- சாயும்- செம்மறி- ஆட்டுமந்தை மனநிலையை உருவாக்கும் முயற்சி. அத்துடன், இது யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாதிருக்கும் வாக்காளர்களை வெற்றிபெறும் தரப்பின் பக்கமாக கவரும் முயற்சியுமாகும்.
மேலும்,இது ‘விசயம் தெரியாதவர்களை’ நஜிப் நல்லபடியாகத்தான் வேலை செய்கிறார் என்று நம்ப வைக்கும் முயற்சியுமாகும்.
என்னைப் பொருத்தவரை, இந்திய மலேசிய வாக்காளர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவர்கள் 13வது பொதுத் தேர்தலில் எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய்ந்துதான் வாக்களிப்பார்கள்.
நான் அடிக்கடி சந்திப்பவர்கள் பினாங்கிலும் சிலாங்கூரிலும் பக்காத்தான் அரசுகள் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறுகின்றனர்.
அவர்கள் இப்போது எளிதில் ஏமாந்துவிடுவதில்லை. தேர்தலின்போது சொல்லப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டா என்பதைப் பார்க்கிறார்கள்.
வெற்றுச் சுலோகங்களையும் மக்கள் நம்புவதில்லை, வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள்.
இனிப்பான மொழிகளாலும் வாக்குறுதிகளாலும் இந்திய மலேசியர்களின் ஆதரவை பிஎன் பெற்றுவிட முடியாது என்பதை நஜிப்புக்கு எடுத்துரைக்க வேண்டும்.
அவர்கள் கடந்தகாலத் தவறுகள் திருத்தப்பட்டு வளப்பதையும் வாய்ப்புகளையும் தரமான வாழ்க்கையையும் கொண்டுவரும் உண்மையான, அர்த்தமுள்ள மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.
======================================================================================================
எம்.மனோகரன் டிஏபி கோத்தா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினர்.