சிலாங்கூரில் பிஎன் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை ஏற்றுள்ளது உட்பூசல் நிலவுவதற்கான அறிகுறி எனச் சொல்லப்படுவதை அந்த மாநில பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார் மறுத்துள்ளார்.
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளர்கள் எனக் கூறப்பட்டுள்ள- தமக்கும் பிஎன் சகாவான முகமட் ஜின் முகமட்டுக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாக வெவ்வேறு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக நோ சொன்னார். என்றாலும் தாங்கள் ‘ஒரே குழுவை’ சார்ந்தவர்கள் என அவர் வலியுறுத்தினார்.
“எங்கள் முகாம் பிஎன் முகாம்,” என புத்ராஜெயாவில் நோ நிருபர்களிடம் கூறினார்.
“தற்போது முகமட் ஜின் துணைத் தேர்தல் இயக்குநர். அவர் முன்பு பிஎன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். மாநில பிஎன் துணைத் தலைவர் என்ற முறையில் நான் கட்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன்.”
“எங்களுக்குச் சிலாங்கூரைப் பற்றி தெரியும். நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் மோத வேண்டும். அதனால் நாங்கள் எங்கள் வேலைகளில் கவனம் செலுத்துகிறோம். அதனை தனியாகச் செய்ய முடியாது,” என்றார் நோ.
மந்திரி புசார் பதவிக்கு யாரும் பெயர் குறிப்பிடப்படவில்லை
சிலாங்கூரில் நஜிப் தமது முத்திரையை ஆழப்படுத்தியுள்ளது, மாநில பிஎன் தலைவர்களுக்கு இடையில்தலைமைத்துவ நெருக்கடி நிலவுவதற்கான அறிகுறி என அண்மையில் வெளியான செய்திகளுக்கு நோ பதில் அளித்தார்.
ஆளும் கூட்டணி வலிமையுடன் திகழ்கிறது என்பதைக் காட்டுவதற்காக பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து சிலாங்கூரைக் கைப்பற்ற மாநில பிஎன் தலைவருமான நஜிப் அரும்பாடுபட்டு வருகிறார்.
சிலாங்கூரில் பல உயர் நிலை அதிகாரிகள் இருந்த போதிலும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மாநில பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதை நோ சுட்டிக் காட்டினார்.
“அவர்கள் ஏன் அன்வாரை ஆலோசகராக நியமித்தனர் ? நடப்பு மந்திரி புசார் நிறுவனத் தலைவராக பணியாற்றியுள்ள போது அவரது தலைமைத்துவம் மீது அன்வாருக்கு நம்பிக்கை இல்லையா ?
“சிலாங்கூரில் நிறுவனத் தலைவரான மந்திரி புசாரும் பிகேஆர் துணைத் தலைவரும் அரசியல் எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர். அன்வார் ஆலோசகராக நியமிக்கப்படும் அளவுக்கு அங்கு பிளவு உள்ளதா ?” என அவர் பதிலடி கொடுத்தார்.