பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மற்றவர்களும் கையெழுத்திடும் நேர்மை வாக்குறுதி ஒரு சட்டப்பூர்வமான ஆவணமில்லை என்பதை ட்ரேன்ஸ்பேரன்ஸி இண்டர்நேசனல்-மலேசியா (டிஐ-எம்) ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், அவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்டால் அதற்கு அவர்களைப் பொறுப்பேற்கும்படி செய்யும்.அது அவர்களின் பெயர்களை அதன் அகப்பக்கத்திலும் முகநூல், டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் வெளியிடும். இதனால் வாக்குறுதியை மீறியவர்கள் பொதுமக்களின் நெருக்குதலுக்கு ஆளாவார்கள்.
இது அரசியல்வாதிகள் வாக்குறுதிமீறலில் ஈடுபடாதிருக்க ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று டிஐ-எம் தலைவர் பால் லோ( வலம்) நம்புகிறார்.
“எங்கள் தகவல் வட்டாரங்களிலிருந்து எந்தெந்த வேட்பாளர்கள் நேர்மையற்றவர்கள் என்பதைப் பொதுமக்களும் தெரிந்து கொள்வார்கள்”, என்றவர் நேற்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.
வேட்பாளர்களின் ஒழுங்குமீறல் பற்றிய செய்தியைப் பரப்புவதில் ஊடகங்கள் உதவலாம் என்றும் அவர் கூறினார்.
தேர்தலில் போட்டியிடும் பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதி பின்வரும் அம்சங்களை உள்ளக்கியது. 1) தங்கள் நடைமுறைகளில் உண்மை, நேர்மை, நெறிமுறைகள், பொறுப்புடைமை ஆகியவற்றை பின்பற்றுதல், கையூட்டு வாங்குவதில்லை, கொடுப்பதில்லை, ஊழல் நடவடிக்கைகளைத் தவிர்த்தல்; 2) மக்கள் நலனை நிலை நிறுத்தி அதற்கு முன்னுரிமை அளித்தல்; 3) நல்ல நிர்வாகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பின்பற்றுதல்; 4) மலேசியாவின் சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுதல்.
இந்த வாக்குறுதிகள் மீறப்படுகின்றனவா என்பதை டிஐ-எம் கண்காணிக்கும்.
அப்படியே மீறப்பட்டாலும் டிஐ-எம் அதை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடமோ (எம்ஏசிசி) தேர்தல் ஆணையத்திடமோ (இசி) முறையிடாது.
ஆனால், அவ்விரண்டு ஆணையங்களும் டிஐ-எம்மிடமிருந்து தகவல் பெற்று தேவையான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று லோ கூறினார்.