UIA என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மாணவர் பேராளர் மன்றம் பொதுத் தேர்தல் மீது ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்கு ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் முடிவைத் தெரிவிக்கும் கடிதம் தமக்கு மாணவர் விவகாரத் துறைத் தலைவர் அக்மால் குஸைரி அப்துல் ரஹ்மானிடமிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைத்துள்ளதை UIA பல்கலைக்கழக மாணவர் பேராளர் மன்றத் தலைவர் முகமட் ஹமிடி ஸாம்ரி கூறினார்.
“13வது பொதுத் தேர்தல்: மலேசியாவின் நம்பிக்கை,” என்னும் கருப்பொருளுடன் அடுத்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த ஆய்வரங்கம் “தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.”
“பெரிய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக என்று கூறப்பட்ட காரணத்தினால் அரசியல் நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என எங்களுக்கு தெரிய வந்துள்ளது.”
என்றாலும் உண்மையான காரணத்தை அறிந்து கொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்,” என முகமட் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.
அந்த ஆய்வரங்கில் முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின், தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா, பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் ராஜா அகமட் இஸ்காண்டார் ராஜா யாக்கோப், அம்னோ இளைஞர் பிரிவின் புதிய ஊடகப் பிரிவுத் தலைவர் துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆகியோர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.