டிஏபி-க்கு அளிக்கப்படும் வாக்கு இஸ்லாம் ஒடுக்கப்படுவதற்கு வழி வகுத்து விடும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்லியிருப்பது, அதிகமான மலாய்க்காரர்கள் டிஏபி-க்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதைக் கண்டு அம்னோ அஞ்சுவதைக் காட்டுவதாக டிஏபி உதவித் தலைவர் அரிபின் ஒமார் கூறியிருக்கிறார்.
டிஏபி-க்கு அளிக்கப்படும் வாக்கு இஸ்லாம் ஒடுக்கப்படுவதற்கு வழி வகுத்து விடும் என நஜிப் விடுத்த அறிக்கை “ஆதாரமற்ற அவதூறான கருத்து” என அரிபின் வலியுறுத்தினார்.
“அதிகமான மலாய்க்காரர்கள் வெளிப்படையாக டிஏபி-க்கு ஆதரவு தெரிவிப்பதாலும் அம்னோவை விட்டு ஒடுவதாலும் அம்னோ அடைந்துள்ள அச்சத்தையே அது பிரதிபலிக்கிறது,” என அவர் இன்று விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
பினாங்கு பக்காத்தான் ராக்யாட் கீழ் வந்தது முதல் டிஏபி தலைமையிலான மாநில அரசாங்கம் மாநிலத்தில் இஸ்லாமிய விவகாரங்களுக்கான நிதி உதவி அதிகரித்துள்ளதை அரிபின் சுட்டிக் காட்டினார்.
“ஆகவே டிஏபி-க்கு முஸ்லிம்கள் ஆதரவு பெருகி வருவது அம்னோ பீதியடைய வழி வகுத்து விட்டது என்பது தெளிவாகி விட்டது,” என டிஏபி நியமித்துள்ள செனட்டரான அரிபின் சொன்னார்.
“முஸ்லிம்கள் டிஏபி-யை ஆதரிக்கின்றனர். காரணம், மலேசிய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள இஸ்லாத்தின் நிலையை கட்சி மதிப்பது அவர்களுக்குத் தெரியும்.”
“டிஏபி இஸ்லாத்தின் பண்புகளை நிலை நிறுத்துகிறது என்பது இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஊழலைத் தடுக்கவும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் ஆளுமையில் பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தவும் டிஏபி உறுதி பூண்டுள்ளதிலிருந்து அதனைத் தெளிவாக அறிய முடியும்.”
“நஜிப்: மேலும் சிறந்த எதிர்காலத்துக்கு பாரிசானுக்கு வாக்களியுங்கள்” என்னும் தலைப்பில் பிப்ரவரி 24ம் தேதி தி ஸ்டார் நாளேட்டில் வெளியான செய்தி பற்றி அரிபின் கருத்துரைத்தார்.
“பிகேஆர் கட்சிக்குச் செலுத்தப்படும் வாக்கு aqidah-வை அழித்து விடும், பாஸ் கட்சிக்கான வாக்கு முஸ்லிம்களிடைய ஐக்கியம் சீர்குலைய வழி வகுக்கும், டிஏபி-க்கு போடப்படும் வாக்கு இஸ்லாம் ஒடுக்கப்படுவதற்கு வழி கோலும்,” என நஜிப் சொன்னதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டிருந்தது.
அதற்கு இரண்டு நாள் கழித்து நஜிப் முஸ்லிம்களிடையே சமய உணர்வுகளையும் டிஏபி-க்கு எதிராக சமூக வெறுப்புணர்வையும் தூண்டி விடுவதாக அவருக்கு எதிராக போலீசில் அரிபினும் டிஏபி தேசிய பிரச்சாரத் துணைச் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரியும் புகார் செய்தனர்.