லாஹாட் டத்துவில் இன்று காலை மலேசிய பாதுகாப்புப் படையினருக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தங்கள் தரப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாக சூலு சுல்தானின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சூலு சுல்தான் என்று தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் ஜமாலுல் கிராமின் (இடம்) சகோதரர் அஸ்ஸிமுடி கிராமிடமிருந்து இத்தகவல் பெறப்பட்டதாக அப்பேச்சாளர் அப்ரேஹம் இட்ஜிரனி கூறியதாக ஏபிஎஸ்-சிபிஎன் செய்தி அறிவித்தது.
அஸ்ஸிமுடி தம் ஆள்களில் பதின்மர் கொல்லப்பட்டதையும் மேலும் நால்வர் காயமடைந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, குழிபீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட மலேசிய மின்னல்படை வீரர்கள் இருவரும் காயமடைந்த வீரர்கள் இருவரும் மருத்துவமனைக்கு விமானம் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டதாக பெர்னாமா அறிவித்தது.
இதனிடையே, லாஹாட் டத்துவில் உள்ள போலீசார் அவசரகால உத்தரவு எதையும் பெறவில்லை எனத் தெரிவித்ததாக த ஸ்டார் பிற்பகல் மூன்று மணிக்குக் கூறியது.
சம்பூர்ணா மாவட்டப் போலீஸ் தலைவர் பிர்டுஸ் பிரான்சிஸ் அப்துல்லா, போலீசும் மற்ற பாதுகாப்புப் படையினரும் ஆயத்த நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்குமாறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்குமுன் வந்த செய்தி
இட்ஜிரனி, தாக்குதலை நிறுத்துமாறு மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். அஸ்ஸிமுடியின் ஆள்களில் பெரும்பாலோர் கத்திகளைத்தான் வைத்திருக்கிறார்கள். மிகச் சிலரே துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என்றாரவர்.
மலேசிய போலீஸ் மின்னல் படையினர் குறிபார்த்து சுடுவோரைக் கொண்டு அஸ்ஸிமுடியின் ஆள்களைச் சுட்டுத்தள்ளுவதாக அவர் சொன்னார்.
மலேசிய சீனமொழி நாளேடான சைனா பிரஸ், ஊடுருவல்காரர்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மலேசியப் படையினரில் மூவர் காயமுற்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை மேற்கோள் காட்டி அறிவித்திருந்தது.
ஏபிஎஸ்-சிபிஎன் செய்தி, பிலிப்பின்சுக்கான மலேசியத் தூதர் இரு தரப்புகளும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தினார். என்று கூறியது. ஆனால், சேதம் எதுவுமில்லை என்றவர் கூறியுள்ளார்.
மலேசியத் தூதர் இத்தகவலை பில்லிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சர் அல்பர்ட் டெல் ரோசாரியோவிடம் தெரிவித்ததாக பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
பிலிப்பின்ஸ் அரசு நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், இன்று காலை 10 மணிக்கு மலேசியப் படையினர் தாக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால், அவர்கள் திருப்பிச் சுடவில்லை என்றார்.
“லாஹாட் டத்து- நமது பாதுகாப்புப் படைகள் ஒரு தடவைகூட துப்பாக்கியால் சுடவில்லை. ஆனால், இன்று காலை 10 மணிக்கு அவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
“லாஹாட் டத்து: நிலவரம் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊடுருவல்காரர்கள் சுற்றி வளைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இதுவரை திருப்பிச் சுடவில்லை. சுமூகமாக முடிய பிரார்த்தனை செய்வோம்”, என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
சூலு தரப்பினரின் வேண்டுகோள்
மலேசிய படையினர் நெருங்கிச் சென்று பின்னர் பின்வாங்கியதாகவும் அஸ்ஸிமுடி தெரிவித்ததாக இட்ஜிரனி கூறினார்.
மலேசிய அரசாங்கம் அதன் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் அதற்குத் தொல்லை கொடுக்கும் நோக்கம் ஊடுருவல்காரர்களுக்கு இல்லை என்றார். “ஆனால், மலேசிய அதிகாரிகள் நடவடிக்கையைத் தொடர்ந்தால் சூலு சுல்தானின் ஆள்கள் கடைசி மூச்சுவரை போராடுவதைத் தவிர வேறு வழியில்லை”, என இட்ஜிரனி கூறினார்.
பிலிப்பின்சின் இன்னொரு ஊடகம், பிலிப்பின் டெய்லி என்குவைரர், சாபா வானொலி ஒன்று பெல்டா 17இல் உள்ள தன் செய்தியாளர் காலை பத்து மணிக்கு நிறைய துப்பாக்கிச் சூடுகளைச் செவிமடுத்தார் என அறிவித்ததாகக் கூறியது.
மலேசிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டபோது அவர்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்தனர் என்றும் ஆனால், கிராமவாசிகள் சிலர் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டிருக்கிறார்கள் என்றும் அது கூறிற்று.