ஐந்து பாகிஸ்தானியர், முதன்முதலாக மலேசியா வந்தபோது சாபாவில் முகவர்கள் மூலமாக தங்களுக்குக் குடியுரிமை கிடைத்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர். அவர்களில் சிலர் ஐந்து தடவை தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள்.
மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் முதல்பக்கச் செய்தியாக இதை வெளியிட்டுள்ளது. அதன் நிருபர்கள், பேராக் ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி சென்று அங்கு தங்கியுள்ள ஒரு பாகிஸ்தானியரைச் சந்தித்து இத்தகவலை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
பாகான் டத்தோ பிகேஆர் தொகுதி, வாக்காளர் பட்டியலை ஆராய்ந்துகொண்டிருந்தபோது அவர்களை முதலில் அடையாளம் கண்டு அதை அந்நாளேட்டிடம் தெரிவித்தது..
நான்கு பாகிஸ்தானியர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதையும் அவர்கள் ஒரே வீட்டில் இருப்பதையும் அது கண்டது.
“வாக்காளர் பட்டியலை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, அவர்கள் ஒரே வீட்டில் இருந்ததையும் பாகிஸ்தானிய இனத்தவர் என்பதையும் கண்டு சந்தேகம் வந்தது”, என ஹுத்தான் மெலிந்தாங் பிகேஆர் தேர்தல் இயக்குனர் ஏ.கணேசன் அந்நாளேட்டிடம் தெரிவித்தார்..
பின்னர் அக்கட்சி ஹுத்தான் மெலிந்தாங் சென்று அவர்களைச் சந்தித்தது. அனைவரும் புதிய மைகார்ட் வைத்திருந்தனர். ஒருவர் மட்டும் பழைய அடையாள அட்டையை வைத்திருந்தார்..
“ஐவரும் 30-க்கும் 40-வயதுக்கும் இடைப்பட்டவர்கள். முதன்முதலாக மலேசியா வந்தபோதே ஐசி கிடைத்துவிட்டதாகக் கூறினர்.
அடையாள அட்டை சாபாவில் கிடைத்தது
“சாபாவில் முகவர்கள் மூலமாக ஐசி கிடைத்ததாம். பிறகு தீவகற்ப மலேசியாவுக்கு வந்தார்களாம்”, எனக் கணேசன் கூறினார்.
கணேசன் கூறியதை உறுதிப்படுத்திக்கொள்ள சினார் ஹரியான் ஆள்கள் அந்த பாகிஸ்தானியர் வீட்டுக்குச் சென்றனர். ஐவரில் இருவரை மட்டுமே சந்திக்க முடிந்தது. மற்றவர்களைப் பார்க்க முடியவில்லை.
அவர்கள் தேர்தல் வேலையாக வந்திருப்பதாகக் கூறியதும் அவ்விருவரும் ஒத்துழைத்து தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பித்தார்கள்.
ஐசி எப்படி கிடைத்தது என்று விசாரித்ததற்கு அவர்களில் ஒருவர் அலி ஹம்சிர், 54, சாபாவில் என்றார்.
“நான் மணமானவன். என் குடும்பம் பாகிஸ்தானில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அவர்களைப் பார்க்க திரும்பிச் செல்கிறேன்”, என்றார்.
வாக்காளர் பட்டியலை ஆராய்ந்த பின்னர் இவ்விவகாரம் பற்றி போலீசில் புகார் செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக பிகேஆரின் ஹுத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கூறினார்.
மைகார்ட் கொடுத்ததில் இசிக்குத் தொடர்பில்லை
இதனிடையே, சந்தேகத்துக்குரிய மைகார்ட் கொடுக்கப்பட்டதில் தேர்தல் ஆணையத்துக்கு சம்பந்தமில்லை என்று விளக்கமளித்துள்ளார் அதன் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்.
ஒரு வாக்காளரின் மைகார்டைச் சரிபார்த்து அவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டா இல்லையா என்பதை இசி தீர்மானிக்கிறது என்றாரவர்.
“ஒருவர் வந்து மைகார்டைக் காண்பித்ததும் வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இருக்கிறதா என்பதை ஆராய்கிறோம். இருந்தால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது”, என்றார்.
”அதற்குமுன் சொல்லப்பட்டது (மைகார்ட் கொடுக்கப்பட்டது பற்றி) எங்களுக்குத் தொடர்பில்லாத விவகாரம்”.
தேசிய பதிவுத் துறை தலைமை இயக்குனர் ஜரியா முகம்மட் சைடைத் தொடர்புகொண்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார். எந்த ஓர் அறிக்கையும் விடுக்குமுன்னர் அதை ஆராய வேண்டியுள்ளது என்றார்.