லஹாட் டத்துவில் நேற்று மலேசியா படைபலத்தைப் பயன்படுத்தியுள்ளது சபாவில் பகைமை நடவடிக்கைகளாக விரிவடைந்து உள்நாட்டுப் போராக மாறக் கூடும் என மோரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF) எச்சரித்துள்ளது.
“சபாவில் உள்நாட்டுப் போர் மூளக் கூடும் என நான் அஞ்சுகிறேன். ஏனெனில் சபாவில் ஆயிரக்கணக்கான பாங்சாமொரோ இன மக்கள் வாழ்கின்றனர்,” என அந்த அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் காபுல் ஹாஜிரு கூறினார்.
“அந்த விவகாரம் குறித்து MNLF தலைவர் நூர் மிசுவாரியே முடிவு செய்ய வேண்டும். அவர் என்ன முடிவு செய்தாலும் நாங்கள் அதனைப் பின்பற்றுவோம். அண்மைய நிகழ்வுகள் பற்றி தாவ்சுக் சகோதரர்களும் சுலு சகோதரிகளும் வருத்தம் அடைந்துள்ளனர். மனம் புண்பட்டுள்ளனர்,” என காபுல் சொன்னார்.
ஆண்டு ஒன்றுக்கு ‘தங்கள் தாய் நாட்டுக்காக’ 5,300 ரிங்கிட் செலுத்தி வரும் மலேசியாவில் (சபாவில்)சுலு சுல்தானுக்கு ஆட்சிக்கு ஆதரவாக 8,500 பிலிப்பினோக்கள் -பெரும்பாலும் தாவ்சுக் (சுலு மக்கள்) வசிப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த விவரங்களை பிலிப்பின்ஸ் ஸ்டார் என்ற நாளேடு வெளியிட்டுள்ளது.
மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஏடு தெரிவித்தது.
இதனிடையே லஹாட் டத்து இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுக்கள் தொடரும் வேளையில் தாக்குதலை நடத்தியுள்ள மலேசியாவை சுலு சுல்தானுடைய சகோதரி ஜேசல் கிராம் சாடியுள்ளார்.
“லஹாட் டத்து முகாம் மீது நடத்தப்படுள்ள தாக்குதல் தேவையற்றது. எங்கள் தரப்பில் 10 பேர் உயிரிழந்தனர். நால்வர் காயமடைந்தனர்,” என்றார் அவர்.
“கடந்த இரண்டு நாட்களாக அமைதித் தீர்வு காணவும் ஆயுதங்களைக் கை விடவும் அதிகாரப்பூர்வமாகவும் அதிகாரப் பற்றற்ற முறையிலும் பேச்சுக்கள் நடைபெறுகின்றன,” என்றும் அவர் சொன்னார்.
“லஹாட் டத்துவில் அமைதியாகக் குடியேறி தங்கள் தாய்நாட்டில் வாழ்வதற்கு உள்ள உரிமையை நிலை நாட்ட தமது சிறிய தந்தையான அஸ்ஸிமுடி கிராம் அங்கு சென்றார்.”
கலந்துரையாடலைத் தொடருவது என்னும் தனது கடப்பாட்டை பிலிப்பின்ஸ் அரசாங்கம் நிறைவேற்றி இருந்தால் வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும்.
இதனிடையே நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட இரண்டு போலீஸ் மின்னல் படை வீரர்களுடைய சடலங்கள் இன்று காலை கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
29 வயதான இன்ஸ்பெக்டர் சுல்கிப்லி மாமாட், 46 வயது கார்ப்பரெல் சபாருடின் டாவுட் ஆகியோர் கொல்லப்பட்ட மின்னல் படை வீரர்கள் ஆவர்.
அந்தத் துப்பாக்கிச் சண்டையில் 32 வயது கார்ப்பரெல் முகமட் தார்மிஸி ஹஷிம், 39 வயது கார்ப்பரெல் அஸ்மான் அம்போங், 22 வயது கான்ஸ்டபிள் முகமட் கயூம் அய்க்கல் ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் இப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.