இன்றும் நாளையும் கோலாலம்பூரில் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையில் நடைபெறும் பேச்சுகளில் புலம்பெயர்ந்துவரும் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப்பணிப்பெண்கள் பற்றியும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இருதரப்பு ஒத்துழைப்பு மீதான கூட்டு ஆணைய (ஜேசிபிசி) த்தின் அந்த 11வது கூட்டத்தில்,கடல், நில எல்லைகளை நிர்ணயம் செய்தல்மீதான பேச்சுகளின் முன்னேற்றம் குறித்தும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கபப்டும் என்று அது கூறிற்று.
பேச்சுகளில் கலந்துகொள்ளும் மலேசியக் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் அனிப்பா அமான் தலைமை தாங்குகிறார். இந்தோனேசியக் குழுவுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஆர்எம். மார்டி எம். நடேல்காவா தலைமைதாங்குவார்.
அமைச்சர்களின் சந்திப்புக்கு முன்னர் உயர் அதிகாரிகள் அரசியல், பொருளாதார, சமூக-பண்பாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடந்த்துவர்.
இந்த ஜேசிபிசி கூட்டம், கடந்த ஆண்டில் இருதரப்பு ஒத்துழைப்பில் காணப்பட்ட முன்னேற்றங்களையும் கடந்த ஆண்டு மே 18-இல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் இந்தோனேசிய அதிபர் டாக்டர் சுசிலோ பம்பாங் யுதோயோனோவுக்குமிடையிலான சந்திப்பின்போது காணப்பட்ட முடிவுகள்மீது எடுக்கப்பட்ட தொடர்நடவடிக்கைகளையும் பரிசீலனை செய்யும்.
-பெர்னாமா