அரசுசார்பற்ற அமைப்புகள் பல, பக்காத்தான் அதன் தேர்தல் கொள்கைவிளக்க அறிக்கையை மறுஆய்வு செய்து மலேசிய இந்திய சமூகத்தின் தேவைகளையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
அது கவனக்குறைவாக விடுபட்டிருக்கலாம் என்று கூறிய மக்கள் நலன் மற்றும் உரிமை அமைப்பின் (பவர்) தலைவர் எஸ்.கோபிகிருஷ்ணா கூறினார். பொதுத் தேர்தலுக்குமுன் அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றாரவர்.
“இண்ட்ராப் உள்பட, பல என்ஜிஓ-கள் கருத்துகளை முன்வைத்துள்ளன. அவர்களுக்கென சமுதாய சீரமைப்புக் கொள்கைகள் தேவை. சிறுபான்மையினர் விவகாரத் துறை போன்ற ஒன்றை அமைக்கலாம்”, என்று கோபி கூறினார்.
பக்காத்தான்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இந்திய சமூகத்துக்கு அக்கூட்டணியின் கொள்கைவிளக்க அறிக்கை ஏமாற்றமளித்தது. அந்த வகையில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “இந்தியர்களின் குறுகிய-கால அவாக்களை நிறைவேற்றி வைக்க முயற்சி செய்வதன்மூலமாக நல்ல சேவை செய்து வருகிறார்”, என்றாரவர்.
சமுதாய சீரமைப்பு அவசியம் என்ற கருத்தை தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு (நியாட்) தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிமும் (வலம்) எடுத்தொலித்தார். அவரது என்ஜிஓ ‘சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை’யும் வேறு சில கொள்கைகளும் தேவை என்று நினக்கிறது.
ஓராங் அஸ்லி பற்றிப் பேசும் பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கை இந்தியர் பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவர்களும் தீவகற்ப மலேசியாவில் உள்ள ஒதுக்கப்பட்டவர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்று தஸ்லிம் கூறினார்.
“அதை அவர்கள் குறிப்பிட்டு ‘ஆம், எங்களுக்குத் தெரியும்’ என்று கூறி அது திட்டவட்டமாகக் கவனிக்கப்படும் என்று பொது அறிக்கை ஒன்றை விடுத்திருக்கலாம்”.
ஆனாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பக்காத்தான் தேர்தல் கொள்கைவிளக்க அறிக்கை நன்றாகத்தான் உள்ளது என்றும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் தஸ்லிம் குறிப்பிட்டார்.
கொள்கைவிளக்க அறிக்கை ‘தொடரும் வழிமுறை’
இதனிடையே, முன்னாள் இண்ட்ராப் தலைவர் வி.கணபதிராவ், இவ்வாரத் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கையை அவசரப்பட்டுக் குறைகூறுதல் சரியல்ல என்றார்.
“மக்கள் ‘வேண்டாம், வேண்டாம்’ என்கிறார்கள். ஆனால், இது முதலாவது கொள்கைவிளக்க அறிக்கைதான். இது ஒரு தொடரும் வழிமுறை. பொருள்கள், சேவை வரி பற்றியெல்லாம்கூட அவர்கள் பேசப்போவதாகக் கேள்விப்பட்டேன்”, என்றார்.
இந்திய சமூகம் நீண்டகாலமாகவே ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளதாக கருதுகிறது. 2008-இல் அரசியல் சுனாமி ஏற்பட உதவியர்கள் என்பதால் தங்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்படுவதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், இந்திய மலேசியர்கள் பக்காத்தான் மற்ற சமூகத்தாரிடமும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை உணர வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார். 2007-இல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட கணபதிராவ் இப்போது சிலாங்கூர் டிஏபி தலைவர்களில் ஒருவர். .