மையநீரோட்ட ஊடகங்களின் செய்தியறிக்கைகள், மாற்றரசுக் கட்சியை அதுவும் குறிப்பாக அன்வார் இப்ராகிமை பிலிப்பினோ கும்பலின் ஊடுருவலுடன் தொடர்புப்படுத்துகின்றன.
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு, பிலிப்பினோ ஊடகமான Inquirer News-சை மேற்கோள்காட்டி எம்பிபி வலைத்தளத்தில் இடம்பெற்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
“பிலிப்பின்ஸ் செய்தித்தளமான Inquirer News அன்வாருடன் நெருங்கிய தொடர்புள்ள சாபா மாற்றரசுக் கட்சித் தலைவர் ஒருவர் ஊடுருவல்காரர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற செய்தியை அம்பலப்படுத்தியுள்ளது.
“அச்சந்திப்பு கடந்த நவம்பர் மாதம் நடந்ததாக பிலிப்பின்ஸ் உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி Inquirer News அறிவித்துள்ளது. அதன் விளைவாக சூலு சுல்தான் ஜமலுல் கிராம் III சாபாவுக்குள் இருந்தவாறே சாபா உரிமை கோரிக்கையை அரங்கேற்ற தம் கூட்டத்தாரை கம்போங் தண்டுவோவுக்குள் ஊடுருவச் செய்தார்”, என்றந்த நாளேடு கூறியுள்ளது.
பெர்னாவும் அதேபோன்ற ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அனாமதேய செய்தி அறிக்கை ஒன்றைக் குறிப்பிட்டு அச்செய்தியறிக்கை பிலிப்பினோ இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி “மலேசிய மாற்றரசுக் கட்சியின் அழைப்பின்பேரில் (ஊடுருவல்காரர்கள்) நிலப் பிரச்னை பற்றி விவாதிக்க சாபா சென்றுள்ளனர்” என்று தெரிவித்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.