சுலு துப்பக்கிக்காரர்களுடைய ஊடுருவலுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த ஊடுருவல்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள்.
அந்தக் குற்றச்சாட்டுக்களினால் அவர் பெரிதும் வருத்தமடைந்துள்ளது தெளிவாகத் தெரிந்தது.
அந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்திய அம்னோ தொடர்புடைய ஊடக நிறுவனங்களான டிவி3க்கும் உத்துசான் மலேசியாவுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாம் தமது வழக்குரைஞர்களுக்குப் பணித்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.
சுலு சுல்தானுடைய ஆட்கள் யாரையும் அவர் சந்தித்ததாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அன்வார் ‘இல்லை, இல்லை’ என உறுதியாகக் கூறினார்.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நாட்டின் எல்லைகளுக்குள் ஊடுருவியதாகவும் சபா மீது கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் உத்துசான் மலேசியாவும் டிவி3-யும் குற்றம் சாட்டியிருந்தன.
“நான் அவர்களைச் சந்தித்திருந்தாலும் அதில் என்ன பிரச்னை ? அரசாங்கத்தில் உள்ள யார் மோரோ தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் நோர் மிசுவாரி-யை அல்லது மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணித் தலைவர் அல் ஹாஜ் முராட் எப்ராஹிம்-மை அரசாங்கத்தில் உள்ள யார் சந்தித்தார்கள்,” என பினாங்கு செபெராங் ஜெயாவில் செராமா கூட்டம் ஒன்றில் பேசிய பின்னர் அன்வார் தெரிவித்தார்.
“அதில் முக்கியமானது: “நமது எல்லைகளுக்குள் ஊடுருவி கிளர்ச்சி செய்ய ஊக்கமளிப்பதற்கு அல்லது மறைமுகமாக அங்கீகாரம் அளிப்பதற்கு விவாதம் ஏதும் நடத்தப்பட்டதா ?” என அவர் நேற்றிரவு ஈராயிரம் பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய பின்னர் கூறினார்.
“உண்மையில் எனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. நமது எல்லைகள் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்றும் ஏன் நடவடிக்கை எடுக்க இவ்வளவு நீண்ட நாட்களாகியது என்றும் அரசாங்கத்தைக் கேட்கும் அறிக்கையை மட்டுமே நான் வெளியிட்டேன். மலேசியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என நான் கருதுகிறேன்.”
கடந்த பிப்ரவரி 12ம் தேதி சபாவின் கிழக்கு கோடியில் லஹாட் டத்து நகரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் தண்டுவோ-வை சுலு துப்பாக்கிக்காரர்கள் குழு ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டது.
மூன்று வாரங்களுக்கு நீடித்த அந்த இழுபறியைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சண்டை மூண்டது. அதில் 12 ஊடுருவல்காரர்களும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
ஊடுருவல்காரர்கள் நடத்திய குழிபீரங்கித் தாக்குதலினால் அவர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இன்னும் அந்தக் கிராமத்தில் பிலிப்பினோ துப்பாக்கிக்காரர்கள் பதுங்கியுள்ளனர். அவர்களை மலேசிய போலீஸ் மின்னல் படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
சபா மீதான சுலு சுல்தான் ஜமாலுல் கிராம் lll-ன் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 100லிருந்து 300 பேர் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள துப்பக்கிக்காரர்கள் தென் பிலிப்பீன்ஸிலிலுள்ள ஒதுக்குப் புறமான தீவுகளிலிருந்து படகுகள் மூலம் சபாவுக்குள் ஊடுருவினர்.
அந்த ஊடுருவலில் அன்வாருக்கு பங்கு இருப்பதாக பிலிப்பீன்ஸ் ஊடகங்களை மேற்கோள் காட்டி அரசாங்க ஆதரவு வலைப்பதிவு ஒன்று செய்தி வெளியிட்டு அன்வாரை அந்த விவகாரத்துக்குள் இழுத்தது.
கிளர்ச்சிக்காரர்களை சபா எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் சந்தித்ததாகவும் பிலிப்பின்ஸ் வேவுத் துறையை மேற்கோள் காட்டி Philippine Daily Inquirer செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தத் தலைவர் “அன்வாருடன் தொடர்புடைய அரசியல் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்,” என்றும் கூறப்பட்டது.
மலேசிய எதிர்க்கட்சியின் ‘அழைப்பை’ ஏற்று ஊடுருவல்காரர்கள் வந்ததாக ராய்ட்டார் தகவல் ஒன்றை மேற்கோள் காட்டி உத்துசான் செய்தி வெளியிட்டுள்ளது.
“அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் சபாவுக்கு சுயாட்சி கொடுப்பது என்ற வாக்குறுதியுடன் அந்த ஊடுருவல் தொடர்புடையது என மணிலா டைம்ஸ் செய்தியை குறிப்பிட்டு ராய்ட்டர் தெரிவித்தது.
“உண்மையான நெருக்கடியிலிருந்து மக்களைத் திசை திருப்பும் பொருட்டு உருவாக்கப்பட்ட விஷயங்கள் அவை,” என்றும் அன்வார் சொன்னார்.